சில நாட்களுக்கு முன் நண்பர் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் I thank you என்று குறிப்பிட்டு இருந்தார். வெறுமனே Thank you என்பதற்கும் I thank you என்பதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?
Come என்றால் You come என்றுதான் அர்த்தம். Thank you என்றால் I thank you என்றுதான் பொருள். சிலர் பேசும்போது ‘நான்
என்ன சொல்றேன்னா’ என்று தொடங்குவார்கள். அது போல தான் I thank youவில் உள்ள தொடக்கச் சொல்.
Hardy ஆக இருப்பது நல்லதா? Laurel ஆக இருப்பது நல்லதா? - பருமனான உடல்வாகு கொண்ட Hardy, ஒல்லியான Laurel ஆகிய இருவருமே இணைந்து (மெளனப்பட காலத்தில்) நகைச்சுவையை ஏராளமாக வழங்கியுள்ளனர். இந்த இருவரின் பெயர்களும், பெயர்களாக இல்லாமலும் ஆங்கிலத்தில் வெவ்வேறு அர்த்தங்களை அளிக்கின்றன.
ஒருவர் hardy ஆக இருந்தால் அவரால் பிரச்சினைகளை தாங்கிக் கொள்ள முடிகிறது என்று பொருள்.
அவர் சுலபத்தில் களைப்படைந்து விடமாட்டார் என்றும் பொருள். Laurel என்பதற்கு வெற்றிச் சின்னம் அல்லது பாராட்டு என்று ஒரு அர்த்தம் உண்டு. The praise was well-deserved, but this was no time to be resting on laurels என்றால் ‘அந்த பாராட்டு நிச்சயம் நியாயமானது தான் என்றாலும் ஓய்வெடுத்துக்கொள்ள (அதாவது பாராட்டுகளில் திளைக்க) இது நேரமல்ல’ என்று பொருள்.
Trolley problem என்பது என்ன? - Trolley என்பது தள்ளுவண்டி. நீங்கள் ரயில் பாதையில் உள்ள ஒரு தள்ளுவண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு பிரேக் கிடையாது. இப்போது நீங்கள் சென்று கொண்டிருக்கும் தடத்தில் 5 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சில நொடிகளில் தள்ளுவண்டி அவர்கள் மீது ஏறிவிடும் என்ற நிலை. வண்டியில் உள்ள ஒரு ஸ்விட்சை அழுத்தினால் தள்ளுவண்டி வேறு ரயில் பாதைக்கு மாற்றிவிடும். ஆனால், அங்கு நின்று கொண்டிருக்கும் ஒருவர் மீது ஏறி பயங்கர விபத்து ஏற்படக்கூடும். நீங்கள் என்ன செய்வீர்கள்?
மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு உயிரைக் காப்பாற்றுவதை விட 5 உயிர்களைக் காப்பாற்றுவது என்பது சரியாக இருக்கலாம். இதில் வேறொரு கோணம் உள்ளது. தள்ளுவண்டி தானாக சென்று 5 பேர் விபத்துக்குள்ளானால் அதற்கு நீங்கள் காரணமல்ல.
ஆனால், ஸ்விட்சை இயக்குவதன் மூலம் ஒருவர் இறப்பதற்கு நீங்களே முழுப் பொறுப்பேற்கிறீர்கள்! அதாவது கொல்வது கொடும் செயல், இறக்க விடுவது என்பது அவ்வளவுகொடும் செயல் அல்ல எனும் வாதம். இதுபோல் சங்கடமான, ஒழுக்க நெறி தொடர்பான சிக்கல்களை ட்ராலி ப்ராப்ளம் என்பார்கள்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ நூலாசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com
WRITE A COMMENT