சிலரை boomer uncle என்று பதின்ம வயதினர் கிண்டலடிக்கிறார்களே. இதற்கு என்ன பொருள்? - 1955லிருந்து 1964 வரை பிறந்தவர்களை boomers என்று அழைப்பதுண்டு. இது இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலம். போரில் பலர் இறந்துவிட்டதால் அதை ஈடு செய்வதுபோல அப்போது நிறைய குழந்தைகள் பிறந்தன. Boom என்றால் வேகமான வளர்ச்சி. ‘பெரிசு’ என்பதைப் போன்றதுதான் boomer.
அதாவது இந்த தலைமுறையோடு ஒத்துப்போகாதவர்கள். தோராயமாக சொல்வதென்றால் Gen Z என்பவர்கள் இப்போது 12-ல் இருந்து 27 வயது வரை இருப்பவர்கள். Millenials என்பவர்கள் 28-ல் இருந்து 43 வயது வரை கொண்டவர்கள். Gen X என்பவர்கள் 44ல் இருந்து 59 வயது வரை ஆனவர்கள். Boomers அதற்கும்மேல்!
Dual role என்றாலும் duplicity என்றாலும் ஒன்றுதானா? - Dual role என்பது இரட்டை வேடம். கலைப் படைப்புகளில் ஒருவரே இரண்டு பாத்திரங்களை ஏற்று நடிப்பதைப் போல. Duplicity என்பது இரண்டு விதமாகவும் பேசுவது அல்லது மாறி மாறி நேரெதிராக நடந்து கொள்வது. இந்த இரண்டு சொற்களுமே லத்தீன் வார்த்தையான duplex என்பதிலிருந்து பிறந்தவை. ட்யூப்ளெக்ஸ் என்றால் இரட்டை.
(தேர்தல்) பிரச்சாரம் என்பதைக் குறிக்க ஒரு ஆங்கில நாளிதழில் ஒரு நாள் canvas என்றும் மற்றொரு நாள் canvass என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இரண்டும் சரியா? - அப்படிக் குறிப்பிட்டிருந்தால் அவற்றில் ஒன்று தவறு. Canvass என்பது பிரச்சாரம் என்பதைக் குறிக்கிறது. Canvas பாய்மரக் கப்பல், கூடாரம் போன்றவற்றுக்கு பயன்படும் உறுதியான துணி. ஓவியம் வரையப் பயன்படுத்தப்படும் சீலையையும் இப்படிக் குறிப்பிடுவார்கள்.
Everybody in this school are happy என்பது சரியா? - அல்லது Everybody in this school is happy என்பது சரியா? - Everybody என்பது பலரையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை. ஆனால் everybody, somebody போன்ற வார்த்தைகள் ஒருமையாகத்தான் கருதப்படுகின்றன. எனவே Everybody are happy என்பது தவறு. Everybody is happy, Everyone is happy ஆகியவை சரி.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com
WRITE A COMMENT