ஆங்கிலம் அறிவோமே 4.0 - 88: Pseudonym என்பதன் பொருள் என்ன?


ஆங்கிலம் அறிவோமே 4.0 - 88: Pseudonym என்பதன் பொருள் என்ன?

Pseudo என்றால் பொய் அல்லது பாசாங்கு. ஒருவர் தன் நிஜப் பெயருக்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்துகிறார் என்றால் அது அவரது pseudonym. Pseudoscience என்பது உண்மையான அறிவியல் அல்ல. Pseudointellectual என்பது தன்னை அறிவாளி போல காட்டிக்கொள்ளும் ஒருவரைக் குறிக்கிறது.

இப்போதெல்லாம் இளம்பெண்கள் திருமண வாழ்வில் தங்களுக்கு space வேண்டும் என்கிறார்கள். விண்வெளிக்கும் இதற்கும் எதாவது தொடர்பு உண்டா? - Space என்பதற்கு விண்வெளி என்று ஒரு பொருள் உண்டுதான். Spacecraft, Space travel.
Space என்பது இடைவெளியையும் குறிக்கிறது. வெற்றிடத்தையும் குறிக்கிறது. நெருக்கமான உறவினர்கள் என்றாலும் எந்த இருவருக்குமே அவரவருக்கென்று சுயவிருப்பங்கள் இருக்கும், தனிப்பட்ட நண்பர்கள் இருப்பார்கள், தனித்துவமான சிந்தனைகள் இருக்கும். அவை மதிக்கப்படும் போதுதான் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதைத்தான் தங்களுக்கிடையே space தேவை என்கிறார்கள். ‘எனக்குப் பிடித்தவர்களை எல்லாம் உனக்கும் அதே அளவு பிடித்திருக்க வேண்டும். நம் இருவருக்கும் இடையே பகிர்ந்து கொள்ள கூடாத விஷயம்என்று எதுவுமே இருக்கக்கூடாது’ என்பதில் மிகவும் அழுத்தம் கொடுத்தால் உறவு கசந்துவிட வாய்ப்பு உண்டு. புத்தகத்தில் கூட வரிகளுக்கிடையே போதிய space இல்லையென்றால் பார்க்கவும் நன்றாக இருக்காது படிக்கவும் எளிதாக இருக்காது.

Crutch, walking stick இரண்டும் ஒன்றா? - Walking stick என்பது கைத்தடி. Crutch என்பது பழுது ஏற்பட்ட காலைக் கொண்டு நடப்பதற்கு உதவியாகத் தோளின் கீழ்ப்பகுதியில் வைத்துக்கொள்ளும் ஊன்றுகோல். ஆதரவாக இருக்கும் ஒருவரையும் crutch எனக் குறிப்பிடுவதுண்டு. Crutch என்ற ஒருமை சொல் உண்டு என்றாலும் பொதுவாக இதைப் பன்மையில் crutches என்கிறார்கள்.

The spirit is willing but the flesh is weak என்று ஒருவர் கூறினார். அதற்குப் பொருள் என்ன? - அவர் முதுமையை எட்டி விட்டவராகவோ நோய்வாய்ப் பட்டவராகவோ இருக்க வாய்ப்பு உண்டு. ‘மனம் உற்சாகமாக இருக்கிறது. அடுத்தடுத்து பல வேலைகளைச் செய்யதிட்டமிடுகிறது. ஆனால், உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது’ என்பதைக் குறிப்பது தான் மேற்படி வாக்கியம்.

கடந்த 20 வருடங்களாக நடிப்பு துறையில் இருக்கும் 30 வயதுக்காரர், கடந்த 10 வருடங்களாக நடிப்புத் துறையில் இருக்கும் 70 வயதுக்காரர், சமீபத்தில் நடிக்க வந்து விட்டு அனைவரையும் பின் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்த ஒருவர். இந்த மூவரில் யாரை veteran என்று கூறலாம்? - வயதுக்கும் veteran ஆவதற்கும் நேரடித் தொடர்பு இல்லை. நீண்ட காலம் ஒரு துறையில் (நடிப்புதான் என்றில்லை, ராணுவம் உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும்) பணியாற்றியவரைத்தான் veteran என்பார்கள். எனவே உங்கள் மூன்று எடுத்துக்காட்டுகளில் முதலாமவர்தான் veteran. (இதை வெட்ரன் என்று சிலர் உச்சரிக்கிறார்கள். வெடரன் என்றே உச்சரிக்க வேண்டும்)

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

WRITE A COMMENT

x