Published : 11 Nov 2019 09:44 AM
Last Updated : 11 Nov 2019 09:44 AM
புதுக்கோட்டை
பள்ளி மாணவர்களுக்கு பாக்ஸ் கட்டிங், ஸ்பைக் போன்ற முறைகளில் முடிதிருத்தம் செய்ய வேண்டாம் என முடிதிருத்தும் நிலையங்களுக்கு நேரில் சென்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான்கோட்டை மேற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் 124 மாணவர்கள் பயில்கின்றனர். ஊர் மக்கள், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் இப்பள்ளியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள முன்மாதிரிப் பள்ளிகளில் ஒன்றாக இப்பள்ளி திகழ்கிறது. இந்நிலையில் இப்பள்ளி மாணவர்கள் தலைமுடியை பல்வேறு வடிவங்களில் வெட்டி வருவதால், மாணவர்களுக்கு கவனச் சிதறலும், ஒழுக்கச் சீர்கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்யும்போது முறைப்படுத்தி, பள்ளிச் சூழலுக்கு ஏற்ற வகையில் வெட்டிவிடுமாறு அப்பகுதியில் முடித்திருத்தம் செய்யும்கடைகளுக்கு சென்று அங்குள்ளசிகை அலங்கார கலைஞர்களிடம் பள்ளி ஆசிரியர்கள் துண்டறிக்கைகளை விநியோகித்து, வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியது:மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவது ஆசிரியர்களை மட்டுமே சார்ந்த விஷயமல்ல. இதில், சமூகத்துக்கும் பங்குள்ளது.
அறிவுறுத்தல்அந்த வகையில், மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்யும்போது, தலையில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒரு பக்கம் முடி வெட்டுதல், ஸ்பைக் போன்ற முறைகளை தவிர்க்க வேண்டும் என இப்பகுதியில் முடித்திருத்தம் செய்யும் கடை ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் ஏற்கெனவே பலமுறை கூறியும் ஒரு சிலர் அதை பின்பற்றவில்லை. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு பெரும்பாலான மாணவர்கள் அவ்வாறே செய்துவந்தனர். இதையடுத்து, ஆவணத்தான்கோட்டை சுற்று வட்டாரத்தில் முடித்திருத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT