Published : 05 Apr 2023 06:41 PM
Last Updated : 05 Apr 2023 06:41 PM
சேலம்: கோவையில் இருந்து ஈரோடு, சேலம், வழியாக காஷ்மீர் வரை கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்ட வணிக மேலாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ''இந்தியன் ரயில்வேயின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இயங்கும் சவுத் ஸ்டார் ரயில் வரும் மே மாதம் 11-ம் தேதி கோடைக்கால சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. கோவையில் இருந்து ஈரோடு, சேலம் வழியாக ஸ்ரீநகர், சோன்மார்க், குல்மார்க், ஆக்ரா, அமிர்தசரஸ் போன்ற சுற்றுலா தளங்களுக்கு 12 நாட்கள் செல்கிறது.
கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு சுற்றுலா ரயிலானது, ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர், ஏலகங்கா, பெரம்பூர், விஜயவாடா வழியாக செல்கிறது. இந்த சிறப்பு சுற்றுலாவுக்கு 3 டயர் ஏசி-க்கு ரூ.41 ஆயிரத்து 950-ம், 2 டயர் ஏசி-க்கு ரூ.54 ஆயிரத்து 780-க்கும், முதல் வகுப்பு ஏசி-க்கு ரூ.64 ஆயிரத்து 990-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கும் அறை வசதி, தென்னிந்திய சைவ உணவு, சுற்றிப்பார்த்தல், மேலாளர், பாதுகாவலர் வசதி, ஒலிப்பெருக்கி வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு செல்லும் போது அன்றைக்கு தேவையான உடமைகளை மட்டும் எடுத்து செல்ல வேண்டும். மீதி உடமைகள் ரயிலிலேயே பாதுகாக்கப்படும். இந்த சுற்றுலா ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் வழித்தடத்தில் கேரளா கண்ணூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது, சென்னை சென்ட்ரல்- கண்ணூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06047) வரும் 13-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
இதேபோல மறு மார்க்கத்தில் கண்ணூர்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் 06048) வரும் 14-ம் தேதி கண்ணூரில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 4.20 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT