Published : 15 Dec 2022 04:15 AM
Last Updated : 15 Dec 2022 04:15 AM

ஏற்காட்டில் பெய்த மழையால் தோன்றிய சிற்றருவிகள்: சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ச்சி

ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஏற்பட்டுள்ள திடீர் நீர் வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீரை புகைப்படம் எடுத்து மகிழ்ந்த இளைஞர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: ஏற்காட்டில் பெய்து வரும் மழையால் ரம்மியமான சீதோஷ்ண நிலையை அனுபவிப்பதுடன், ஆங்காங்கே தோன்றியுள்ள சிற்றருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் மேன்டூஸ் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் மழை பெய்தது. நேற்று காலை வெயில் அடித்த நிலையில், மாலையில் மேகமூட்டமாக காணப்பட்டது. பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏற்காடுக்கு, உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால், அங்கு ரம்மியமான சூழ்நிலையும், குளுமையான சீதோஷ்ண நிலையும் நிலவி வருகிறது. மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதைகளில் ஆங்காங்கே சிற்றருவிகள் தோன்றி, நீர் வீழ்ச்சி போன்று தண்ணீர் கொட்டி வருகிறது. 60 அடி பாலம் அருகே சில இடங்களில் சிற்றருவிகள் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றன. அதேபோல, கொட்டச்சேடு செல்லும் மலைப்பாதைகளிலும் சிற்றருவிகள் உருவாகி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. சுற்றுலா செல்லும் பயணிகள் பெரும் பாறைகளில் இருந்து கொட்டும் சிற்றருவிகளில் ஆடிப் பாடி, குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஏற்காட்டில் நேற்று காலை முதல் இரவு வரை பனி மூட்டத்துடன், குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், சுற்றுலாப் பயணிகள் முக்கியமான காட்சி முனைகளுக்கு சென்று இயற்கை எழிலை ரசித்தனர். ஏரிப் பூங்கா, லேடீஸ் சீட், மான் பூங்கா, பகோடா காட்சி முனை, ரோஸ் கார்டன், சில்ட்ரன்ஸ் பார்க், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர் வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். ஏற்காட்டில் நிலவும் குளுமையான சீதோஷ்ண நிலை காரணமாக பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பணிகள் வருகை அதிகரித்துள்ளது.

சேலத்தில் நேற்று முன் தினம் (13-ம் தேதி) பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): வீரகனூர் 45, தம்மம்பட்டி 27, தலைவாசல், 23, மேட்டூர் 12.2, எடப்பாடி 11, கெங்கவல்லி 10, ஏற்காடு 8, ஆத்தூர் 7.6, பெத்தநாயக்கன்பாளையம் 6, ஆனைமடுவு 3, சேலம் 2.6, ஓமலூர் 2, காடையாம்பட்டி மற்றும் கரியகோவில் பகுதியில் தலா 1 மிமீ மழை பதிவானது. ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால், அங்கு ரம்மியமான சூழ்நிலையும், குளுமையான சீதோஷ்ண நிலையும் நிலவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x