Published : 06 Oct 2022 09:00 AM
Last Updated : 06 Oct 2022 09:00 AM
தொடர் விடுமுறையையொட்டி கடந்த 5 நாட்களில் சுமார் 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்துள்ளனர்.
உதகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சீசன் தொடங்கியது. அப்போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் எதிா்பார்த்த அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வரவில்லை.
தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஆயுத பூஜை தொடர் விடுமுறையாலும் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தற்போது உதகையில் பகலில் வெயிலும், இரவில் நீர்ப்பனியும் என இதமான காலநிலை நிலவுவதால் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் நேற்று லவ்டேல் சந்திப்பு முதல் மத்திய பேருந்து நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கரோனாவுக்கு பின்னர் தற்போது வியாபாரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இரண்டாவது சீசனையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் மலர் மாடங்கள், பூங்காக்களில் 10 ஆயிரம் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்வதோடு, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
உதகை தாவரவியல் பூங்காவுக்கு சுமார் 10,000 சுற்றுலா பயணிகள் கடந்த 1-ம் தேதி வந்திருந்த நிலையில், மறுநாள் 14,000 பேராக எண்ணிக்கை அதிகரித்தது.
கடந்த 3-ம் தேதி சுமார் 15,000 பேரும், 4-ம் தேதி 18,171 பேரும் பூங்காவை கண்டுரசித்துள்ளனர். நேற்று மாலை வரை சுமார் 15,000 என மொத்தம் 5 நாட்களில் சுமார் 75,000 பேர் தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர்க் கண்காட்சியை ரசித்துச் சென்றதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT