Published : 13 Sep 2022 04:10 AM
Last Updated : 13 Sep 2022 04:10 AM

சுற்றுலா பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் உதகை படகு இல்லத்தில் ‘மிதவை தளம்’ அமைப்பு

உதகை

சுற்றுலா பயணிகள் வசதிக்காக, உதகை படகு இல்லத்தில் மிதவை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், படகு இல்லத்தில் சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 16 லட்சம் பேர் படகு சவாரி செய்கின்றனர்.

தற்போது, மோட்டார் படகு, மிதி படகு, துடுப்பு படகு என 140 படகுகள் இயக்கப்படுகின்றன. இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

உதகை படகு இல்ல ஏரியில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். வார இறுதியில் தினமும் 15 முதல், 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

படகு சவாரி மேற்கொள்ள கரையை ஒட்டியுள்ள நடைபாதையில் நடந்து சென்று படகில் ஏறி செல்வது வழக்கம். பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்வதால் சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், முதல் முறையாக மிதவை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக படகு இல்ல ஊழியர்கள் கூறும்போது, "சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், படகு இல்ல ஏரியில் புதிதாக மிதவை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடந்து செல்லும்போது, நீரின் மேல் மிதந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சிறுவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்" என்றனர்.

அதிகாரிகள் கூறும்போது, "தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் பணி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x