Published : 19 Aug 2022 09:30 AM
Last Updated : 19 Aug 2022 09:30 AM

முட்டல் ஏரியில் மேற்கூரையுடன் கூடிய படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஆத்தூரை அடுத்த ஆனைவாரி முட்டல் ஏரியில் மேற்கூரையுடன் கூடிய நவீன படகில் சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

ஆத்தூரை அடுத்துள்ள ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலத்தில் மேற்கூரையுடன் கூடிய விசைப்படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

ஆத்தூரை அடுத்துள்ள ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலத்தில் உள்ள அருவியானது வனத்துறை பராமரிப்பில் உள்ளது. சேலம் மாவட்டத்தின் குற்றாலம் என அழைக்கப்படுகிறது. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் அருவியில் நீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள முட்டல் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வதும் வழக்கம்.

முட்டல் ஏரிக்கரையில் பூங்காவும், அதனுள் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாதனங்கள், யானை, ஒட்டகச்சிவிங்கி, முயல், பறவைகள் உள்ளிட்டவற்றின் பிரம்மாண்டமான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே முட்டல் ஏரியில் நீர் மட்டம் குறைந்ததாலும் சிறிய விசைப்படகுகள் பழுதடைந்திருந்த காரணத்தாலும், கடந்த 4 மாதங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுதாகர் கூறியதாவது:

முட்டல் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கு வசதியாக, ரூ.7 லட்சம் மதிப்பிலான மேற்கூரையுடன் கூடிய படகு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து பயணிக்க முடியும். கட்டணமாக, பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. கடந்த ஞாயிறன்று (14-ம் தேதி) 2,680 பேர் வந்திருந்தனர்.

அவர்களில் சிறுவர்கள் 55 பேர் உள்பட மொத்தம் 409 பேர் படகு சவாரி மேற்கொண்டனர். சுதந்திர தின விடுமுறை நாளான 15-ம் தேதி 2,141 பேர் வந்திருந்தனர். அவர்களில் சிறுவர்கள் 48 பேர் உள்பட 362 பேர் படகு சவாரி மேற்கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘குடும்பத்தினர் அனைவரும் ஒரே படகில் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியை அளித்தது. மேற்கூரை இருப்பதால் வெயில் நேரத்திலும் படகில் அமர்ந்து, ஏரியில் பயணிப்பது இதமாக இருக்கிறது. வீடு போன்ற படகில் பயணிப்பது, கேரளாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை நினைவுபடுத்துகிறது’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x