Last Updated : 27 Oct, 2025 03:30 PM

4  

Published : 27 Oct 2025 03:30 PM
Last Updated : 27 Oct 2025 03:30 PM

தமிழ் உரிமை இயக்கத்தினர் எதிர்ப்பு: புதுச்சேரியில் ‘I Love Pondy’ செல்ஃபி பாயின்ட் மூடல்

புதுச்சேரி: ஆங்கில எழுத்துகளால் ஆன ‘I Love Pondy’ என்ற தாவரவியல் பூங்கா செல்ஃபி பாயின்ட் மூடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தமிழில் வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயர்பலகை அமைக்க வேண்டும் என அரசாணை உள்ளது. இருப்பினும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்ப் பலகை தமிழில் இல்லாமல், ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதற்கு தமிழ் உரிமை இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கோரிமேட்டில் இயங்கிய அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி மருந்துக் கடையின் பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் இருந்ததைக் கண்டித்து, பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து புதிய பெயர்ப் பலகை தமிழில் வைத்துள்ளனர். இதேபோல காமராஜர் சாலையில் தனியார் நிறுவன பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரே பணிமனை திறப்பு விழா நடந்தது. இங்கிருந்து இயக்கப்படும் மின் பஸ்களில் ஆங்கிலத்தில் பிஆர்டிசி, எலக்ட்ரிக் பஸ், இ பஸ், ஸ்மார்ட் சிட்டி என எழுதப்பட்டிருந்தது. இதற்கு தமிழ் உரிமை இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு இயக்க தலைவர் பாவாணன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மங்கையர் செல்வன், செயலாளர் தீந்தமிழன், நிர்வாகிகள் பெருமாள், துரை, செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தாவரவியல் செல்ஃபி பாயின்ட் மூடல்: கைதானவர்கள் சிறிது நேரத்தில் புதுச்சேரி தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர். சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயிலில் "I Love Pondy" என ஆங்கிலத்தில் செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதற்க தமிழ் உரிமை இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பிறகு தமிழ் உரிமை இயக்கத்தினர் இயக்க தலைவர் பாவாணன் தலைமையில் தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலுக்கு வந்தனர். ஏற்கனவே ஆளுநர் விழாவுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீஸாருக்கும், தமிழ் உரிமை இயக்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் அந்த செல்ஃபி பாயின்ட்டை தார்பாய் போட்டு மூடினர். மேலும் தமிழில் எழுதி வைக்க ஒரு வாரம் கெடு அளிப்பதாக தமிழ் உரிமை இயக்கத்தினர் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x