Published : 06 Oct 2025 02:33 PM
Last Updated : 06 Oct 2025 02:33 PM
“இறைவன் முதலில் சொர்க்கத்தைப் படைத்தானா, அல்லது மொரிசியசைப் படைத்தானா? ஒருவேளை மொரிசியசை பார்த்த பின்பு இறைவன் சொர்க் கத்தைப் படைத்திருக்கக் கூடும்.” உலக புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க்ட்வைன் எழுதிய ‘ஃபாலோயிங் த ஈக்குவேட்டர்’ (FOLLOWING THE EQUATOR) என்ற புத்தகத்தில் உள்ள வரிகள் இவை. நாட்டின் மொத்தப் பரப்பளவில் பெரும்பாலான சதவிகிதத்தை கரும்புக்காடுகள் கொண்டிருந்தாலும் மொரிசியஸில் பாம்பு போன்றவையோ கொடிய விலங்குகளோ இல்லை.
இந்திய பெருங்கடலில் இருக்கும் இங்கு சுனாமியால் ஒரு பகுதிக்குக் கூட சேதமில்லை. திரும்பிய பக்கமெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் கோயில்கள்! இப்படி பல்வேறு விஷயங்கள் ஆச்சரியத்தில் நம் புருவங்களை உயர்த்த வைக்கின்றன.
தண்ணீருக்கடியில் மீன்களுக்கு நடுவே திருமணம் செய்து கொள்வது, கூட்டம் கூட்டமாக வந்து கும்மாளமிடும் டால்பின்கள் என மொரிசியஸ் சுற்றுலாவைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருந்தாலும் இதன் உச்சக்கட்ட மகிழ்ச்சி, மொரிசியஸ் சுற்றுலாவும் நீர் விளையாட்டுகளும் மிகவும் பாதுகாப்பானவை.
உலகின் மாசுபடாத, சுத்தமான காற்றைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் மொரிசியஸும் உள்ளது. பல்வேறு கலாச்சாரங்களின் கலவை கொண்ட நாடாக இருந்தாலும் தமிழ்க் கலாச்சாரத்தின் அசையாத ஆணிவேர்களை இங்கே காண முடியும். தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாகக் காணப்பட்டாலும் தமிழ்ப் பேசுபவர்கள் மிகவும் குறைவு.
தொப்புளான், சிவன் கஞ்சாமலை, மணிமேகலை, கிருஷ்ணா கொல்லி மலை, சடையன், லோகாம்பாள், அருட் புட்பரதம் போன்ற பல தமிழ்ப் பெயர்கள் வழக்கத்தில் இருக்கிற இந்நாட்டில் “வணக்கம் , என்ன செய்தி?” என்று இரண்டு தமிழ் சொற்களே பெரும்பாலும் தமிழர்களை அடையாளம் காட்டுகின்றன. தைப்பூசக் காவடி, விரதம், பால்குடம், அம்மனுக்குக் கூழ்வார்த்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் என தமிழர் கொண்டாட்டங்கள் இங்கும் நடக்கின்றன.
ரிலாக்ஸ் டூர்: சுற்றுலாவைப் பொறுத்தவரை சொல்வதொன்று செய்வதொன்று என்ற பேச்சுக்கே இடமில்லை. மிகவும் தெளிவு. இங்கிருந்து கிளம்பும்போதே ‘டிராவல் ஏஜென்ட்’-களிடம் எல்லாவற்றையும் புக் பண்ணிவிட்டு தான் செல்ல வேண்டும் என்ற கவலை வேண்டாம்.
அங்கங்கே நீங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழிகள் உள்ளன. ஆனால் ஒன்றை மனதில் கொள்ளுங்கள், சுற்றிப் பார்ப்பதையும் தாண்டி மொரிசியஸின் வசீகரிக்கும் வண்ணங்கள் நிறைந்த கடலழகு உட்கார்ந்த இடத்திலேயே மெய்மறக்கச் செய்யும். அதாவது இது ஒரு ரிலாக்ஸ் டூருக்கான இடம்.
பரபரப்பாகக் காலையில் கிளம்பி மாலை வரை சுற்றிப்பார்ப்பதைத்தான் சுற்றுலா என்று நினைப்பவர்கள் இங்கே அதை மாற்றிக் கொள்ளலாம். கடற்கரை ஓட்டல்களை தேர்ந்தெடுப்பவர்கள் 2 வேறு வேறு ஓட்டல்களை வெவ்வேறு பகுதிகளில் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் இங்கு ஒவ்வொரு கடற்கரையும் ஒருவித அழகும் அனுபவமும் கொண்டவை.
இந்திய உணவு: நீங்கள் சீன உணவு பிரியர் என்றால் உங்களுக்கான இடம் மொரிசியஸ். ஆனால் இந்திய உணவகங்களுக்கும் பஞ்சமில்லை. மான் இறைச்சி உணவும் பெரும்பாலான இடங்களில் கிடைக்கின்றன. மான் இறைச்சியா? என்று ஆச்சரியப்படாதீர்கள். மான்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கமே இங்கு மான் வேட்டையை அனுமதிக்கிறது.
மொரிசியஸுக்கு சுற்றுலா செல்பவர்கள் ஓட்டல்களில் தான் தங்க வேண்டும் என்று அவசியமில்லை. கிச்சன் வசதி கொண்ட ஒன்றிலிருந்து எட்டு பெட்ரூம் வரை கொண்ட பீச் வில்லாக்கள் உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும். மொரிசியஸ் ஒரு சுற்றுலாவுக்கான நாடு என்று நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு, தொழில், முதலீடுகள் என்று மொரிசியஸில் கொட்டிக் கிடக்கும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு சில உங்களுக்காக:
சில்வர் எக்கனாமி (Silver Economy): 50 வயது கடந்தோர் மொரிசியஸில் ஓய்வு பெறலாம் என்ற வகையில் அமைந்திருக்கும் இத்திட்டம் வெளிநாட்டில் ரிட்டையர்டாக விரும்புபவர்களின் சிறந்த தேர்வாக இருக்கும்.
திரைப்பட தயாரிப்புக்கு சலுகை (Film Rebate Scheme): இத்திட்டத்தின் அடிப்படையில் மொரிசியஸில் தயாரிக்கப்படும் திரைப் படங்கள், முழு திரைப்படம், பகுதி அல்லது பாடல் எதுவாக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் நீங்கள் செலவழிக்கும் தொகையில் 30 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை மொரிசியஸ் அரசு திரும்பத் தருகிறது. திரைப்படம் மட்டுமின்றி குறும்படம், டாக்குமென்டரி மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், டப்பிங் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.
சுய வேலைவாய்ப்பு (Self-Employment Scheme): இத்திட்டத்தின் வாயிலாக அரசாங்கம் நிர்ணயித்திருக்கிற ஒரு தொகையை, உங்கள் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட நாட்கள் வரை இருப்பில் வைத்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் உங்களுக்கு ஆர்பி என்று சொல்லக்கூடிய குடியிருப்பு அனுமதி (residential permit) கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் விரும்பும் தொழிலை மொரிசியஸில் மேற்கொள்வது மட்டுமின்றி அங்கேயே தங்கவும் செய்யலாம்.
மருந்தியல் தொழில் (Pharma Industries): மருத்துவ பொருட்களைப் பொறுத்தவரை அனைத்து வகையான மருந்துகளையும் மொரிசியஸ், வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்கிறது. பெரும்பாலும் இந்தியா இதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்காக மொரிசியஸில் நாம் நமது நிறுவனத்தைத் துவங்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இந்தியாவில் இருக்கிற நிறுவனத்தையே மொரிசியசில் பதிவு செய்து எல்லா விதமான டென்டர்களிலும் பங்கு பெறலாம். இதையும் தாண்டி வெங்காயம், அரிசி, உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் என ஏராளமான பொருட்களை மொரிசியஸுக்கு நீங்கள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
நிரந்தரக் குடியேற்றம் (Permanent Resistancy): இங்கு நிரந்தரமாகக் குடியேற விரும்புவோர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறது, மொரிசியஸ். இதற்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதன் மூலம் மொரிசியஸில் வீடு ஒன்றில் முதலீடு செய்தால் போதும். அதன் அடிப்படையில் அரசு நிரந்தர குடியுரிமை வழங்குகிறது. மொரிசியஸ் அரசின் திட்டங்களை நெறிமுறைப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் முழு பங்கு வகிப்பது மொரிசியஸின் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (ECONOMIC DEVELOPMENT BOARD).
உங்களின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் இதன் மூலம்தான் நீங்கள் செயல்படுத்த வேண்டும். உங்களின் பணி அனுமதி (WORK PERMIT), தொழில் அனுமதி (OCCUPATIONAL PERMIT), நிரந்தர குடியுரிமை (PERMANENT RESITANCY), குடியிருப்பு அனுமதி (RESIDENCE PERMIT) போன்ற அனைத்தையும் பொருளாதார மேம்பாட்டு வாரியம் கையாள்கிறது.
நீலப் பொருளாதாரம் (Blue Economy): ப்ளூ எகானமி என்ற இத்திட்டத்தின் மூலம் கடல் சார் வணிக முதலீடுகளில் இறங்கலாம். மொரிசியஸ், தீவு என்பதாலும் துறைமுகப் பயன்பாடு அதிகம் என்பதாலும் இத்தொழில் பெரும் வருமானத்தை ஈட்டி தர வாய்ப்புள்ளது. மீன்பிடித்தல், ஏற்றுமதி, பதப்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும்.
மொரிசியஸில் முதலீடு என்ற எண்ணம் தோன்றும் போதே அது மொரிசியஸுக்கு மட்டுமானது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அங்கு ஆரம்பிக்கும் பெரும்பாலான தொழில்களை, ஆப்ரிக்க நாடுகள் முழுவதும் விரிவு படுத்த ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கின்றன.
மொரிசியஸில் ‘ஃபிரி போர்ட்’ (FREE PORT என்று சொல்லக்கூடிய தீர்வை இல்லாத்துறைமுகம் மூலமாக நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு எண்ணிலடங்காத சலுகைகள் கிடைக்கின்றன. வருமானத்தைப் பொறுத்தவரை இது ஒரு ‘டாக்ஸ் ஹெவன்’ (Tax heaven) என்று அழைக்கப்படுகிறது.
இங்கு வருமானவரி 15% மட்டுமே. கல்வி பயில்வோர்க்கும் மொரிசியஸ் சிறந்த நாடு. இங்குள்ள இரண்டு மருத்துவ கல்லூரிகளும் இந்தியாவைச் சார்ந்தவர்களால் நடத்தப் படுவதால் இங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயர்வு. தென்னிந்தியாவிலிருந்து இங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்களை அதிகம் காண முடியும்.
உயிர் உறுப்பினர்: மொரிசியஸ் தமிழர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் நினைவில் நிற்கின்றன. என் சிறுவயதில் இந்தியாவில் இருந்து கப்பலில் வரும் தமிழ் கையெழுத்துப் பிரதிகளை வாங்குவதற்கு பணம் இல்லாமல் அச்சுக்கூடம் ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்து அந்த காசை சேமித்து அந்த கையெழுத்து பிரதிக்கு உயிர் உறுப்பினரானோம் (Life Membership) என்றார். நாம் இன்றுவரை 'லைஃப் மெம்பர்ஷிப்' என்பதை ‘ஆயுள் சந்தா’ என்று தான் அழைக்கிறோம். ‘உயிர் உறுப்பினா்’ என்ற வார்த்தையை எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை.
ஒரு முறையேனும்... மொரிசியஸ் ஒரு குட்டி தீவுத்தானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணப்பட அதிக நேரம் பிடிக்கும் . ஆனால் சாலையின் இரு புறமும் பரவிக் கிடக்கும் பசுமையும், மலை அழகும் நம் பயண களைப்பை காணாமல் போகச் செய்து விடும். மொரிசியஸ் சுற்றுலாவைத் திட்டமிடுபவர்கள் அருகில் இருக்கும் நாடுகளான ரீ - யூனியன் (Re-union ) சீசெல்ஸ் போன்ற நாடுகளையும் இணைத்து திட்டமிடலாம். தமிழும், கலாச்சாரமும் ஒன்று கலந்து உயிரோடு உயர்ந்து நிற்கும் மொரிசியஸை ஒரு முறையேனும் பார்க்க முயலுங்கள்.
மங்கள் மகாதேவ்:
* மொரிசியஸ் சுற்றுலா என்றால் வெறும் கடல் மட்டும்தான் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட 108 அடி உயரமுள்ள மங்கள் மகாதேவ் (Mangal Mahadev) என்றழைக்கப் படும் சிவன் சிலையின் அழகு பிரமிக்கச் செய்கிறது.
* இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் கொண்டாடப்படும் சிவராத்திரி விழாக்களில் மொரிசியஸின் சிவராத்திரி மிகப் பிரமாண்டமானது.
* ஒரே இரவில் சுமார் ஆறு லட்சம் பேர் இங்கு கூடுகின்றனர். இது மொரிசியஸின் மக்கள் தொகையில் பாதி எனலாம்.
* மொரிசியஸை ஆள்வோரில் பிரதமர், குடியரசு தலைவர் போன்றோரும் இந்திய வம்சாவழியினரே.
இருவழிக் கட்டணம் ரூ.50,000: சென்னையிலிருந்து வாரம் ஒரு முறையும், மும்பையில் இருந்து வாரத்துக்கு ஐந்து முறையும் டெல்லியிருந்து வாரம் ஒரு முறையும் ஏர் மொரிசியஸ் விமானங்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன.
இதை தவிர தினமும் துபாய் வழியாகவும் பெங்களூருவில் இருந்து வாரத்துக்கு நான்கு முறையும் பிற வழித்தடங்களிலும் கிடைக்கின்றன. இருவழி பயண கட்டணம் ரூ. 50 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.
சுற்றுலா மற்றும் முதலீடுக்காக செல்பவர்களுக்கும், தொழில் தொடங்க செல்வபவர்களுக்கும் விசா கட்டணம் ஏதும் இல்லை, மொரிசியஸில் இறங்கும் போது விசாவை பெற்றுக் கொள்ளலாம்.
- malaipa@yahoo.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT