Published : 21 Aug 2025 06:47 AM
Last Updated : 21 Aug 2025 06:47 AM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளையம் - ஊட்டி, ஊட்டி - குன்னூர், ஊட்டி - கேத்தி இடையேசிறப்பு மலை ரயில் அக்டோபர் இறுதிவரை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளையம் - குன்னூர் - ஊட்டி இடையே தலா ஒரு முறை, ஊட்டி - குன்னூர் இடையே தலா 4 முறை மலை ரயில் இயக்கப்படுகிறது.
கோடை சீசனின்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், மேட்டுப்பாளையம் - ஊட்டி, ஊட்டி - குன்னூர் மற்றும் ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், ஆகஸ்ட் மாதம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் இறுதி வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இம்மாதம் 23, 30-ம் தேதி, செப்டம்பர் 5, 7,அக்டோபர் 2, 4, 17, 19-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். பின்னர் மறுநாள் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயிலில் 40 முதல் வகுப்பு, 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். ஊட்டியில் இருந்து குன்னூருக்கு இம்மாதம் 23, 30-ம் தேதி, செப்டம்பர் 5, 7, அக்டோபர் 2, 4, 17, 19-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் ரயில், ஊட்டிக்கு காலை 10.45 மணிக்கு வந்தடையும். ஊட்டியில் இருந்து மதியம் 2.50 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.56 மணிக்கு குன்னூர் சென்றடையும்.
இதில், 80 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். இதேபோல, ஊட்டி - கேத்தி இடையே இம்மாதம் செப்டம்பர் 5, 6, 7, அக்டோபர் 2, 3, 4, 5, 18, 19-ம் தேதி களில் சிறப்பு ரயில் இயக்கப்படும். ஊட்டியில் இருந்து காலை 9.45, 11.30 மற்றும் மதியம் 3 மணிக்கு இந்த ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலில் 80 முதல் வகுப்பு மற்றும் 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT