Published : 21 Jul 2025 06:32 PM
Last Updated : 21 Jul 2025 06:32 PM

பாஸ்ட் டேக் அமைக்கும் பணி: பைக்காரா படகு இல்லம் செல்ல 2 நாட்கள் தடை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் பைக்காராவில் பாஸ்ட் டேக் சோதனைச் சாவடி மாற்றியமைக்கப்படுவதால், நாளை மற்றும் 23-ம் தேதி படகு இல்லம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பலர் வருகின்றனர். இதில் ஏப்ரல், மே கோடை சீசனில் சுமார் 10 லட்சம் பேரும் ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேரும் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் முடிந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறையாமல் உள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் பொதுவாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா உட்பட்ட இடங்களுக்கு ஒரே நாளில் சென்று வர திட்டமிட்டு சுற்றுலா செல்வர். ஆனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொட்ட பெட்டா, பைக்காரா படகு இல்லம் போன்ற இடங்களுக்கு செல்லும் போது வாகன கட்டணம் வசூலிக்க காத்திருத்தல் போன்ற காரணங்களால் திட்டமிட்டபடி அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளால் போக முடிவது இல்லை.

இதனால், கூடுதலாக ஊட்டியில் ஒரு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்படுகிறது. மேலும் நீண்ட நேரம் காத்திருக்கும் போது வாகனங்களுக்கு எரிபொருள் செலவும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழக வனத்துறை சார்பில் தொட்ட பெட்டா சோதனை சாவடியில் ‘பாஸ்ட் டேக்’ மின்னணு பரிவர்த்தனையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது வனத்துறை சார்பில் இந்த திட்டத்தை பைக்காரா படகு இல்லத்திலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஸ்ட் டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி நடக்கவுள்ளதால் நாளை (ஜூலை 22) மற்றும் நாளை மறுநாள் 23-ம் தேதி பைக்காரா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ”பைக்காரா வனச்சரகத்துக்குப்பட்ட பைக்காரா படகு இல்லம் செல்லும் நுழைவு வாயிலில் உள்ள டிக்கெட் கவுண்டர் பகுதியில் பாஸ்ட் டேக் முறை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது” என்று வனத்துறையினர் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x