Published : 12 Jun 2025 03:32 PM
Last Updated : 12 Jun 2025 03:32 PM

விருதுநகர் - மேற்கு தொடர்ச்சி மலை அருவிகள் ‘சுற்றுலா தலம்’ ஆகுமா?

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவிகள் மற்றும் கோயில்களை சுற்றுலாத்தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தேவியாறு, நகரியாறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, செண்பகதோப்பு பேயனாறு, அத்திகோயில் ஆறு, அர்ஜுனா நதி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் சாஸ்தா கோயில் அருவி, மீன்வெட்டிப் பாறை அருவி உள்ளிட்ட 13 அருவிகள், சாஸ்தா கோயில் அணை, 6-வது மைல் நீர்த்தேக்கம், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணை மற்றும் பூங்கா ஆகியவை உள்ளன.

மேலும் மலையில் ராக்காச்சி அம்மன் கோயில், அய்யனார் கோயில், வனப்பேச்சி அம்மன் கோயில், தென் திருமாலிருஞ்சோலை காட்டழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள நீரோடைகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதால் யானை, மான், சாம்பல் நிற அணில்கள், காட்டுப்பன்றி, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

ராஜபாளையம் சாஸ்தா கோயில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் காட்டழகர் கோயில் ஆகியவற்றில் சனி, ஞாயிறு நாட்களில் மட்டும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழக வனத்துறையின் 'டிரக் தமிழ்நாடு' திட்டத்தில் செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரையிலான 9 கிலோ மீட்டர் தூர மலைப் பாதையில் மலையேற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதலில் சனி, ஞாயிறு மட்டும் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து நாட்களிலும் மலையேற அனுமதிக்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 13 அருவிகள், அணைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றை சுற்றுலாத்தலமாக அறிவிக்க ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் வனத்துறை, அறநிலையத் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு இல்லாததால் சுற்றுலாத் தலமாக அறிவிப்பதில் காலதாமதம் நிலவுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவிகள் மற்றும் கோயில்கள் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டால் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சியடையும். அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரமைக்கப்படாத பிளவக்கல் அணை பூங்கா:

பிளவக்கல் அணையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த 1985-ம் ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது. அதன்பின் 2002-ம் ஆண்டு ரூ.20 லட்சம் செலவில் பூங்கா சீரமைக்கப்பட்டது. இங்கு சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், பார்வையாளர் கோபுரம், வண்ண மீன்கள் காட்சியகம் ஆகியவை உள்ளன. பிளவக்கல் அணையில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை மிக அருகில் ரசிக்கலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால் மலையடிவார கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்து வந்தது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த தால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிளவக்கல் அனை பூங்காவை சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். ஆனால் தற்போது வரை பூங்கா சீரமைப்பு பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x