Published : 02 May 2025 06:41 AM
Last Updated : 02 May 2025 06:41 AM
கொடைக்கானல்: விடுமுறை நாளான நேற்று குறைந்த எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்ததால், கொடைக்கானல் வெறிச்சோடிக் காணப்பட்டது. இ-பாஸ் மற்றும் வாகனக் கட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கோடை காலம், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் இருக்கும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ‘இ-பாஸ்’ நடைமுறையில் உள்ளது.
மேலும், கோடை விடுமுறையின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும் வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களை மட்டுமே கொடைக்கானலுக்குள் அனுமதிக்க வேண்டும் என வாகன கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தப்ப மலைவாசஸ்தலங்களுக்கு மக்கள் அதிகம் செல்கின்றனர். ஆனால், இ-பாஸ், வாகனக் கட்டுப்பாடு காரணமாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடந்த 2 ஆண்டுகளாக கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. கோடை விடுமுறை நாட்களில் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் கொடைக்கானல் களையிழந்துள்ளது. மே 1-ம் தேதி அரசு விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று வழக்கத்தைவிட மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, ரோஜாப் பூங்கா, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் மக்கள் அதிகமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாகவும், விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காணப்படும் கொடைக்கானல் ஏரிச் சாலை, 12 மைல் சுற்றுச்சாலை, செவன் ரோடு, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதுகுறித்து கொடைக்கானல் பகுதி வியாபாரிகள் கூறும்போது, "கோடை சீசனில் 2 மாதங்கள் மட்டுமே கூட்டம் அதிக அளவில் இருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்தால் மட்டுமே கொடைக்கானல் பகுதி வியாபாரிகள், விடுதி உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைக்கும்.
இந்த 2 மாதங்களில் கிடைக்கும் வருவாயைக் கொண்டே ஆண்டு முழுவதும் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. கோடை சீசனையொட்டி கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்துள்ளோம். இ-பாஸ், வாகனக் கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை நம்பியிருந்த வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர்.
பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதற்கு பதிலாக வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். எனவே, இ-பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT