Published : 17 Apr 2025 07:19 PM
Last Updated : 17 Apr 2025 07:19 PM

தொல்லியல் துறை நினைவுச் சின்னங்களை வெள்ளிக்கிழமை கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம்!

புதுடெல்லி: உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களை வெள்ளிக்கிழமை பார்வையிடுவோருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: "ஏப்ரல் 18-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பாரம்பரிய தினத்தை (நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம்) முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவோருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அறிந்து கொள்ள பார்வையாளர்களை ஊக்குவிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை நாட்டின் வரலாற்று மரபு மற்றும் கட்டடக்கலை சிறப்புகளுடன் கூடிய இந்தத் தலங்களை மக்கள் பார்வையிட்டு அவற்றின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம், அதிக மக்கள் இந்த தினத்தில் அவற்றை பார்வையிடுவார்கள். இதன் மூலம் நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொண்டு ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள்.

கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை கவுரவிக்கவும் அவற்றை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.

2024 அக்டோபர் நிலவரப்படி, 196 நாடுகளில் 1,223 உலக பாரம்பரிய தலங்கள் உள்ளன. இவற்றில் 952 கலாச்சார தலங்களாகும். 231 இயற்கை தலங்களாகும். 40 இடங்கள் இரண்டும் இணைந்த தலங்களாகும். இந்தியாவில் 43 உலக பாரம்பரிய தலங்கள் உள்ளன. இந்த ஆண்டு உலக பாரம்பரிய தினத்தின் கருப்பொருள்: "பேரழிவுகள் மற்றும் மோதல்களிலிருந்து பாரம்பரியங்களைப் பாதுகாத்தல்" என்பதாகும்.

இந்தியாவில் 3,697 புராதன நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் ஆய்வகம் அவற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பாக உள்ளது. பாரம்பரிய தலங்களை புதுப்பித்தல், மேம்பாடு செய்தல் போன்றவற்றின் மூலம் மத்திய அரசு முக்கிய பாரம்பரிய தலங்களுக்கு புத்துயிர் அளித்துள்ளது.

நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது பகிரப்பட்ட பொறுப்பு என்பதை உலக பாரம்பரிய தினம் நமக்கு நினைவூட்டுகிறது. நமது வளமான பாரம்பரியம் வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x