Last Updated : 17 Apr, 2025 05:58 PM

 

Published : 17 Apr 2025 05:58 PM
Last Updated : 17 Apr 2025 05:58 PM

பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் இல்லாமல் குமரி சுற்றுலா பயணிகள் தவிப்பு

கன்னியாகுமரிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மூலமாக அரசு துறைகளுக்கும், தனியாருக்கும் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே உள்ளது.

கோடை விடுமுறை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வரத் தொடங்கியுள்ளனர். கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாப புரம் அரண்மனை மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்களுக்கு சென்று வருகின்றனர்.

கோடை விடுமுறை காலம் தொடங்கியும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாதது, இங்கு வருவோரை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை, ரவுண்டானா சந்திப்பு, சூரிய அஸ்தமன மையம், படகு இல்லம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அனைத்து பகுதிகளிலும், தன்னார்வலர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அத்தோடு சரி.

அவை முறையாக இயங்குகிறதா ? பழுதான கேமராக்களுக்கு பதில் புதிதாக கேமராக்கள் எங்கெல்லாம் பொருத்த வேண்டும் ? என மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ, பேரூராட்சியோ, சுற்றுலாத் துறையோ கவலை கொள்ளவில்லை. தற்போதைய நிலையில் நகரில் 20 சதவீத கேமராக்கள் கூட இயங்காத நிலைதான் உள்ளது. இதனால், கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் வழிப்பறிகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மீதான அத்துமீறல்கள் ஆகியவற்றை உடனுக்குடன் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10ம் தேதி தெலங்கானாவில் இருந்து சுற்றுலா வந்த குழுவில், சூரிய உதயம் பார்க்கச் சென்ற போது, 50 வயதான பர்வதம்மா என்ற பெண் மாயமானார். தெலுங்கு மட்டுமே பேச தெரிந்த அவர் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவரை போலீஸாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால், சுற்றுலா குழுவில் இருந்து பிரிந்து அவர் எங்கு சென்றார் என்பது கூட தெரியவில்லை.

முக்கடல் சங்கமத்தில் பூட்டிக் கிடந்த புறக்காவல் நிலையம், எஸ்.பி. ஸ்டாலின் நடவடிக்கையால் திறக்கப்பட்டு போலீஸார் நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால் காணாமல் போகும் சுற்றுலா பயணிகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

அடிப்படை வசதிகள்: முக்கடல் சங்கமத்தில் வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகள் கடலில் விழுந்து மரணமடைவது, படகு இல்லம் செல்லும் வழியில் சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருப்பது, அங்கு கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லாதது, நகர சாலைகளில் குப்பையை உடனுக்குடன் அகற்றாதது போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீடிக்கின்றன.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலிலும் வருவாயை மட்டுமே குறிவைக்கும் அறநிலையத் துறை, அங்கு அடிப்படை வசதிகளைச் செய்ய மறந்து விட்டது. எனவே, உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x