Published : 05 Apr 2025 08:45 PM
Last Updated : 05 Apr 2025 08:45 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில் ‘சாயில் நெய்லிங்’ திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.5) ஆய்வு செய்தார்.
புகழ் பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்தின் உதகை உள்ளிட்ட வழித்தடங்களுக்கு செல்ல, கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் முக்கிய வழித்தடமாக உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாகவும், கோத்தகிரி வழியாகவும் உதகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இதில், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப் பாதையில், மழைக்காலங்களில் அவ்வப்போது மண் சரிவுகள் ஏற்பட்டு, மரங்கள், மண் மற்றும் பாறைக் கற்கள் ஆகியவை மேல் இருந்து கீழே உருண்டு விழுந்து சாலையை சேதப்படுத்தி விடுகின்றன.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்தும் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.எனவே, இச்சாலையில் மண் சரிவுகளை தடுக்க, வல்லுநர் குழுவினரின் அறிவுறுத்தலின்படி, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், ‘சாயில் நெய்லிங்’ (மண் ஆணி) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைச்சாலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள 3 இடங்கள் உட்பட நீலகிரி செல்லும் வரை மொத்தம் 10 இடங்கள் நெடுஞ்சாலைத் துறையினரால் கண்டறியப்பட்டன.
அந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ‘சாயில் நெய்லிங்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி இன்று (ஏப்.5) மாலை சென்ற முதல்வர் ஸ்டாலின், மலைப்பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘சாயில் நெய்லிங்’ திட்டப்பணியை ஆய்வு செய்தார். அப்பணியின் நிலவரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவரிடம் விளக்கினார்.
‘சாயில் நெய்லிங்’ என்றால் என்ன? - “மலையில் செங்குத்தான சரிவில் மண் அரிப்பை தடுத்து, நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தும் தொழில்நுட்பமாகும். மண்ணில் 3 முதல் 5 மீட்டர் ஆழத்துக்கு துளை ஏற்படுத்தி அதில் 32 மி.மீ இரும்பு ராடை செலுத்தி, மண் பிடிமானத்துக்கு உதவும், ஒரு வகை விரிப்பான் விரிக்கப்பட்டு, அதன் மீது கான்கிரீட் அமைக்கப்பட்டு, மண்ணின் உறுதித் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
தொடர்ந்து அதில், ‘ஹைட்ரோ சீடிங்’ முறையில் புற்களை வளர்த்து மண் சரிவு தடுக்கப்படும். மேலும், விதைக் கலவையை குழாய் வவழியாக செங்குத்தான மலைப்பகுதிகளில் செலுத்தி ஜியோ-கிரிட் எனப்படும் இரும்பு கம்பி புல்வெளி விரிப்பான் அமைத்து புல் விதைகள் விதைக்கப்பட்ட மேல் பகுதியில் பரப்பப்பட்டு மண் ஆணிகளுடன் இணைக்கப்படுவதாக,” நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT