Published : 13 Mar 2025 05:15 PM
Last Updated : 13 Mar 2025 05:15 PM
கம்பம்: இரண்டு நாள் பெய்த தொடர்மழையால் வறண்டிருந்த சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. வார நாட்கள் என்பதால் இன்று கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் நீண்டநேரம் குளித்து மகிழ்ந்தனர்.
கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாகவும் இருந்து வருகிறது. மேகமலையில் உள்ள ஹைவேவிஸ் தூவானம் அணை நீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளியில் அருவியாக கொட்டுகிறது. அருவிப் பகுதிக்குச் செல்ல ரூ.30-ம் குழந்தைகளுக்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் காலை 8 முதல் மாலை 4 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே இப்பகுதியில் மழை இல்லை. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. கடந்த வாரம் நீர்வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 11,12-ம் தேதிகளில் இப்பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் நீரவரத்து தொடங்கியது. நேற்று ஓரளவுக்கு நீர்அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வமுடன் இங்கு வந்திருந்தனர்.
வாரநாட்கள் என்பதால் கூட்டம் இல்லாமல் இருந்ததால் பலரும் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறையினர் கூறுகையில், ''இரண்டுநாள் பெய்த மழையினால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வருவதால் கூட்டம் இல்லை. வரும் சனி, ஞாயிறுகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்றனர். இதே போல் குரங்கணி, கும்பக்கரை, மேகமலை அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT