Published : 19 Feb 2025 06:27 AM
Last Updated : 19 Feb 2025 06:27 AM
சென்னை: இங்கிலாந்து நாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.வி.ஹெப்ரிடீன் ஸ்கை’ என்ற பயணிகள் சொகுசுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்தது.
சென்னை துறைமுகத்துக்கு சர்வதேச சொகுசு கப்பல்கள் அவ்வப்போது வந்து செல்கின்றன. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள நோபிள் கலிடோனியா என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.வி.ஹெப்ரிடீன் ஸ்கை’ என்ற பயணிகள் சொகுசுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்தது.
இலங்கையின் திரிகோணமலையில் இருந்து வந்த இந்த கப்பலில் 92 பயணிகளும், 76 சிப்பந்திகளும் இடம் பெற்றிருந்தனர். 120 பயணிகள் வரை பயணம் செய்யக் கூடிய இக்கப்பலில் நீச்சல் குளம், இரவு கிளப், 59 சொகுசு அறைகள் உள்ளிட்ட சர்வதேச தரத்திலான வசதிகள் உள்ளன.
இக்கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் சாந்தோம் தேவாலயம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், கோட்டை அருங்காட்சியகம் மற்றும் மெரினா கடற்கரை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர். இக்கப்பல் தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இலங்கை புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில்பாலிவால் கூறுகையில், ``சென்னை துறைமுகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோடு, இந்தியாவில் சர்வதேச சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் சுற்றுலாப் பயணிகள் முனையம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சர்வதேச சுற்றுலாவுக்கான முக்கிய மையமாக சென்னை திகழ்கிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT