Published : 01 Feb 2025 12:58 PM
Last Updated : 01 Feb 2025 12:58 PM

ரயில் அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணத்தை பணமாக செலுத்த அனுமதிக்க கோரிக்கை

ரயில் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் கட்டணத்தை பணமாக செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று உங்கள் குரலில் வாசகர் கோரிக்கை விடுத்துள்ளார். ரயில்வேயின் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒரு இடமாகவும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடமாகவும் சென்னை ரயில் அருங்காட்சியகம் திகழ்கிறது. இது, சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) அருகே அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகம், கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வே, தெற்கு ரயில்வே, ஐ.சி.எஃப் ஆகியவற்றின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் இடமாக உள்ளது. இதுதவிர, பழைய காலத்தில் பாரம்பரிய ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு காலகட்டங்களில் பலரால் தயாரிக்கப்பட்ட இன்ஜின்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம், சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவர்ந்து வருகிறது. மாணவர்களுக்கு அறிவியல்பூர்வமான இடமாகவும், குழந்தைகளுக்கு பொழுது போக்கும் இடமாகவும் உள்ளது.

திங்கள்கிழமை தவிர, மற்ற நாட்களில் அருங்காட்சியகம் திறந்து இருக்கும். இங்கு பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.25-ம், சிறியவருக்கு கட்டணமாக ரூ.15-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக மட்டுமே செலுத்த அனுமதிக்கப்படுகிறது. இதனால், மூத்த குடிமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முஹமது ஹசன் என்பவர் கூறியதாவது: வில்லிவாக்கத்தில் உள்ள ரயில் அருங்காட்சியகத்தில் கட்டணம் செலுத்த கார்டு, ஜிபே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

ரொக்கமாக பணத்தை வாங்க மறுக்கிறார்கள். இதனால், மூத்த குடிமக்கள் அருங்காட்சியகம் வரமுடியால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பணமாகவும் கட்டணம் செலுத்த அனுமதிக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைதான் பெரும்பாலான இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. இதுபோல, ரயில்வேயிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை இருக்கிறது. பணத்தை பாதுகாப்பது சவாலானது. மேலும், பணமும் சேதமடைய வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனையால் நேரடியாக பணத்தை செலுத்தலாம். எளிதான வழிமுறையாக இருக்கிறது. எனவே, ரயில் அருங்காட்சியகத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனையே அனுமதிக்கப்படும்” என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x