Last Updated : 17 Jan, 2025 08:24 PM

 

Published : 17 Jan 2025 08:24 PM
Last Updated : 17 Jan 2025 08:24 PM

தொடர் விடுமுறையால் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

குமரி மாவட்டத்தில் பண்டிகை கால விடுமுறையால் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

நாகர்கோவில்: பொங்கல் மற்றும் தொடர் பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை வரை இந்தக் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரியில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கம கடற்கரையில் அதிகாலையில் சூரிய உதயத்தை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து படகில் சென்று விவேகானந்தர் பாறையை அடைந்து அங்கிருந்து கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கான ஆர்வலம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதற்காக அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் படகு சவாரி செல்வதற்காக சுற்றுலா பயணிகள் பல்லாயிரக்கணக்கானோர் காத்து நின்றனர். ஆனால், இன்று சூறைகாற்று அதிவேகமாக வீசியதால் படகு போக்குவரத்து ரத்து செய்வதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடும் வெயில் அடித்ததால் தங்கும் விடுதிகளில் அறைகளில் அனைவரும் தஞ்சம் அடைந்தனர்.

இதைப்போல் குமரி மாவட்டத்தில் பிற சுற்றுலா தலங்களான திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, வட்டக்கோட்டை உட்பட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. திற்பரப்பில் தண்ணீர் குறைவாக கொட்டினாலும் வெகுநேரம் காத்திருந்து மக்கள் குளித்து மகிழ்ந்தனர். வெயிலுக்கு இதமாக குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் திற்பரப்பில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திற்பரப்பு செல்லும் வழியில் வாகன நெருக்கடியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திற்பரப்பு செல்லும் வழி மற்றும் அருவி பகுதியில் பாதுகாப்பை முறைப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் திற்பரப்பிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு கூடுதல் போலீஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தினார். ஞாயிற்றுக்கிழமை வரை பாதுகாப்பு பலப்படுத்த றே்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x