Published : 16 Jan 2025 04:00 AM
Last Updated : 16 Jan 2025 04:00 AM
கொடைக்கானல்: ஆண்டுதோறும் பூக்கும் ‘ஸ்ட்ரோபிலாந்தஸ் கார்டிஃபோலியா’ வகை குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் மலைப் பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன.
உலகெங்கிலும் 255 வகையான குறிஞ்சி செடிகள் உள்ளன. தமிழகத்தில் கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி, 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறு குறிஞ்சி என 20-க்கும் மேற்பட்ட குறிஞ்சி இனங்கள் உள்ளன. குறிஞ்சியின் பெயரில் கொடைக்கானலில் முருகப்பெருமான் குறிஞ்சி ஆண்டவராக காட்சி அளிக்கும் கோயிலும் உள்ளது. குறிஞ்சி மலர்கள் கடல் மட்டத்தில் இருந்து 1,200 முதல் 2,500 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளரும் தன்மை உடையவை.
இந்நிலையில், ஆண்டுதோறும் பூக்கும் ‘ஸ்ட்ரோபிலாந்தஸ் கார்டிஃபோலியா’ வகை குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன. இப்பூக்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பூக்கும். நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களில் கண்களுக்கு விருந்து படைக்கும் இந்த அபூர்வ மலர் பூத்திருப்பதை, சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறும்போது, “குறிஞ்சி மலர்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகையான ‘ஸ்ட்ரோபிலாந்தஸ் கார்டிஃபோலியா’ வகை குறிஞ்சி மலர்கள், கடந்த 2023-க்கு பிறகு தற்போது கொடைக்கானல் மலைப் பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வகை ஆண்டுதோறும் பூக்கும் தன்மை கொண்டது. நீல நிறத்தில் இருப்பதால் பலரும் அதனை நீலக்குறிஞ்சி மலர் என்று கருதுகின்றனர். நீலக்குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும், தற்போது பூத்துள்ளது அவை அல்ல” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT