Published : 13 Jan 2025 06:12 PM
Last Updated : 13 Jan 2025 06:12 PM

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் அருவி அருகே பெண்கள் உடைமாற்றும் அறையில் நிலவும் அவலங்கள்!

பிரதான அருவி அருகே உள்ள பெண்கள் உடைமாற்றும் அறையின் உள்ளே உடைந்தும், திறந்தும் காணப்படும் ஜன்னல்கள்.

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பெண் பயணிகள் அருவியின் அருகிலுள்ள உடை மாற்றும் அறையில் நிலவும் அவலங்களால் கசப்பான அனுபவத்துடன் ஊர் திரும்புகின்றனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

ஒகேனக்கல்லில் எண்ணெய் மசாஜ், அருவிக் குளியல், பரிசல் பயணம் மற்றும் மீன் சாப்பாடு ஆகியவை பிரதானமாக இடம்பெறும். சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ பிரதான அருவி மற்றும் சினி பால்ஸ் அருவி என 2 அருவிகள் உள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சினி பால்ஸ் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

வெள்ளப்பெருக்கு அல்லாத அனைத்து நாட்களிலும் பிரதான அருவி பகுதியில் பகல் நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ அனுமதிக்கப்படுகின்றனர். பிரதான அருவி பகுதியில் ஆண்கள் குளிக்கும் அருவி பாதுகாப்பு தடுப்புகளுடன் கூடிய திறந்தவெளி பகுதியாக உள்ளது.

அதையொட்டி, பெண்கள் குளிக்கும் பகுதி பாதுகாப்பு தடுப்புகள் மட்டுமின்றி சுற்றுச் சுவர் மற்றும் மேற்கூரையுடன் கூடிய கட்டமைப்பு கொண்டதாக உள்ளது. படிகளில் இறங்கிச் சென்று அருவியில் குளிக்கும் பெண்கள் பின்னர் மேலேறி வந்து அதே பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான உடைமாற்றும் அறைக்கு சென்று மாற்று உடைகளுக்கு மாறிக் கொள்கின்றனர். இந்த உடை மாற்றும் கட்டிடத்தில் நிலவும் சில அவலங்களால் பெண் சுற்றுலாப் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பிரதான அருவி அருகே உள்ள
பெண்கள் உடை மாற்றும் அறையின் வெளிப்புற முகப்பு அருகே
கண்ணாடிகள் உடைந்து காணப்படும் ஜன்னல்கள்.

இதுகுறித்து, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் இருந்து நேற்று ஒகேனக்கல் சுற்றுலா வந்த பெண்கள் சிலர் கூறியது: ஒகேனக்கல்லில் பெண்கள் குளிக்கும் அருவியில் குளித்து முடித்து உடை மாற்றும் அறைக்கு சென்றோம். பெண்கள் உடை மாற்றும் அறை என்ற பெயர்பலகை தாங்கிய அறை மசாஜ் தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அங்கு உடை மாற்றச் சென்றபோது அந்த கட்டிடத்தின் முன்பு சோப்பு, சீயக்காய் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் ஒரு பெண் உள்ளே வந்து, இந்த அறையை உடை மாற்ற பயன்படுத்தக் கூடாது என மிரட்டல் தொனியில் பேசினார்.

இதனால், பெண்கள் பலரும் அந்த கட்டிடத்தினுள் உள்ள இதர பகுதிகளில் நின்று உடை மாற்றும் நிலை ஏற்பட்டது. அப்பகுதியின் அருகே உள்ள ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளதால் வெளியில் நடமாடுவோர் உள்ளே பார்க்கும் சூழல் நிலவுகிறது.

கண்ணாடிகள் உடைந்திருப் பதாலும், உள்ளூர் பெண்கள் உள்ளே வந்து ஆதிக்கம் செலுத்துவதாலும் ஒகேனக்கல் வரும் பெண் சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றும் அறைக்கு சென்றாலும் கூட, வெட்டவெளியில் நின்று உடைமாற்றுவது போன்று பாதுகாப்பற்ற உணர்வுக்கு உள்ளாகிறோம். எனவே, கட்டமைப்புகளை மேம்படுத்தி, உள்ளூர் நபர்களின் ஆதிக்கத்தை ஒழித்து, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பெண் பயணிகளுக்கு இந்த சுற்றுலா தலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x