Published : 12 Jan 2025 02:40 PM
Last Updated : 12 Jan 2025 02:40 PM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் @ பொங்கல் பண்டிகை

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டலூர் உயிரியல் பூங்கா தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குவதால் முக்கிய விழா காலங்கள் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி ஏராளமான பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவர்களின் வசதிக்காகவும், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவையும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவின் உள்ளே செல்ல தனி நுழைவாயில், வெளியே வருவதற்கு தனி வழி என 2 வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பூங்காவை சுற்றி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் பாதுகாப்புக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கரும்பு, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள், பூங்கா மொபைல் செயலி, இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x