Published : 11 Jan 2025 06:17 AM
Last Updated : 11 Jan 2025 06:17 AM
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஜன. 10-ம் தேதி முதல் 12-ம் வரை என மூன்று நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச பலூன் திருவிழாவை, அமைச்சர்கள் ராஜேந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழாவின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று திருவிழாவை தொடங்கி வைத்தனர். நேற்று (ஜன. 10-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை என 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்த பலூன் திருவிழாவில், பிரேசில், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ராட்சச பலூன்களை பறக்க விடும் வல்லுநர்கள் வந்திருந்தனர். புலி வடிவம் உட்பட பல்வேறு வடிவங்களில் வண்ண, வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், பலூனில் உள்ள பிரத்யேக இருக்கையில் அமைச்சர்கள் ஏறி பயணம் செய்து சோதித்துப் பார்த்தனர்.
மாமல்லபுரத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த பலூன் திருவிழாவை காண, பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர். மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிவரை பலூன்கள் பறக்க விடப்படும். மேலும், பலூன் திருவிழா நடைபெறும் வளாகத்துக்குள் செல்ல 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதியும், பெரியவர்களுக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நுழைவு சீட்டை ஆன்லைன் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கவுன்ட்டர்களில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத் துறை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலர் சக்திவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சர்வதேச பலூன் திருவிழாவில் பறக்கவிடப்படும் பலூனில் அமைக்கப்படும் பிரத்யேக இருக்கையில் ஏறி பொதுமக்கள் வானில் பறக்கலாம். ஆனால், திருவிடந்தையில் உள்ள் காற்றின் சூழல் காரணமாக பலூனில் மக்கள் பறக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலும் இதேநிலை உள்ளது. எனினும், பொள்ளாச்சியில், காற்றின் சூழல் சாதகமாக இருப்பதால் அங்கு பலூனில் பொதுமக்கள் பறக்கலாம் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT