Last Updated : 01 May, 2024 04:08 AM

 

Published : 01 May 2024 04:08 AM
Last Updated : 01 May 2024 04:08 AM

புதுவையில் பொலிவிழந்த கடற்கரை சாலை காந்தி சிலை!

புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலையை சுற்றிலும் மின்விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. கடற்கரை சாலை காந்தி சிலைசுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின்விளக் குகள் சேதமடைந்துள்ளன.

புதுச்சேரி: சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் அமைந்துள்ளன. பாரம்பரியம் பேசும் பழங்கால நினைவு சின்னங்களும் அதிகளவில் அமைந்துள்ளன. குறிப்பாக புதுச்சேரி கடற்கரையையொட்டி பல நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன.

பழைய கலங்கரை விளக்கம், பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்ற வரிசையில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி திடலும் அடங்கும். இங்குள்ள காந்தி சிலை பல திரைப்படங்களிலும், குறும் படங்களிலும் புதுச்சேரியின் அடையாளமாக காட்டப்படுவதுடன், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காந்தி சிலையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பழங்கால கல் தூண்கள் பலரையும் கூர்ந்து கவனிக்கத் தூண்டும்.

தற்போது காந்தி சிலையும், அதனைச் சுற்றியுள்ள கல் தூண்களும் சுத்தமின்றி, பொலிவிழந்த நிலையில் காட்சியளிக்கின்றன. காந்தி சிலையின் முகத்துக்கு நேராக அமைக்கப்பட்டுள்ள இரண்டு எல்இடி மின்விளக்குகள் மட்டுமே எரிகின்றன. அதனைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வண்ணமயமான அலங்கார விளக்குகள் எரிவதில்லை.

“இந்த காந்தி சிலையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள கல் தூண்கள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டதே தனி வரலாறு. பிரெஞ்சு காலத்தில் பிரிட்டிஷ் படையுடன் மோதி, செஞ்சி நகரத்தை கைப்பற்றியபோது, அங்கிருந்த பழங்கால நினைவு சின்னங்கள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் இப்போது பராமரிப்பின்றி இருக்கின்றன.

புதுச்சேரியின் வருவாய் பெரும்பகுதி சுற்றுலா மூலமாக கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் பொலிவிழந்து காட்சித் தருவது என்பது கவலையடைய செய்கிறது.நமது நகரின் முக்கிய அடையாளமாக திகழுந்து வரும் காந்தி சிலை, அதைச் சுற்றியுள்ள கற்தூண்கள் பேணி பாதுகாப்பது மிக அவசியம்” என்று புதுச்சேரி நகர மக்கள் தெரிவிக்கின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x