Published : 30 Apr 2024 05:45 AM
Last Updated : 30 Apr 2024 05:45 AM

பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்தி இறங்கினால் ரூ.1000 அபராதம்? - போலீஸ் விளக்கம்

ராமேசுவரம்: பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு இறங்கி வேடிக்கை பார்த்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாம்பன் சாலை பாலத்திலிருந்து மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல்கள், பாம்பன் ரயில் பாலம், பவளப்பாறைகள், குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு, கலங்கரை விளக்கம் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.

இதனால் பாம்பன் சாலை பாலத்தின் இருபுறங்களிலும் ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் தங்களின் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்க்கவும், தங்களின் மொபைல் போனில் செல்ஃபி எடுக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பாம்பன் பாலத்தை கடக்கும் அரசு பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் பாலத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்களும், பயணிகளும் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கி வேடிக்கை பார்த்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்ற தகவல் பல்வேறு சமூக வலைதளங்களில்‌ பகிரப்படுகிறது.

இதுகுறித்து பாம்பன் போலீ ஸார் கூறியதாவது: பாம்பன் பாலத்தில் போக்கு வரத்து நெரிசலை தடுக்க அங்கு வாகனங்களை நிறுத்த வேண்டாம்‌ என்று வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண் காணிக்கப்படுகிறது.

பாம்பன் பாலத்தை பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை பாலத்தின் இரண்டு நுழைவுப் பகுதிகளில் ஒன்றில் நிறுத்திவிட்டு அங்கிருந்து நடந்து சென்று பாலத்தை பார்த்த பின்பு மீண்டும் வாகனங்கள் நிறுத்திய இடத்துக்கு நடந்து சென்று‌ வாகனத்தில் ஏறிச் செல்ல வேண்டும்.

பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனத்தை நிறுத்தி கதவை திறந்து இறங்கினாலே ரு.1,000 அபராதம் விதிக்கப்படும் என்ற தகவல் தவறானது என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x