Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM
கோயம்புத்தூர், திருப்பூர் நகரங்களுக்கான வளர்ச்சிக் குழுமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளில் கூறியிருப்பதாவது:
வீட்டுவசதி துறை மானியக் கோரிக்கை விவாத முடிவில் கடந்த ஆக.13-ம் தேதி துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மதுரை, கோயம்புத்தூர் - திருப்பூர் பகுதிகள், விரைவாக வளர்ந்து வரும் ஓசூர் பகுதிகளுக்கு புதிய நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்கப்படும்’’ என்றார். இதுதொடர்பான பரிந்துரைகளை நகர, ஊரமைப்பு இயக்குநர் நவ.17-ம் தேதி அரசுக்கு அனுப்பினார்.
மாநிலத்தின் 2-வது பெரிய நகரம் கோயம்புத்தூர். விமான நிலையம், ரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலை, அணைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட இந்நகரம் தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதி. கல்வி நிறுவனங்களின் மையமாகவும் செயல்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக மக்கள்தொகை பெருக்கம் அதிகம்உள்ளதால், தற்போதைய கட்டமைப்பு போதுமானதாக இல்லை.
கடந்த 1994-ல் 1,276 சதுர கி.மீ.ஆக இருந்த உள்ளூர் திட்டப் பகுதியின் பரப்பளவு தற்போது 1,532 சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளது. 25 பேரூராட்சிகள், 71 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாக கோயம்புத்தூர் மாவட்டம் உள்ளது.
பின்னலாடை மையம்
இதேபோல, ஜவுளி, பின்னலாடை தயாரிப்பின் மையமாக திருப்பூர் திகழ்கிறது. நாட்டின் 90சதவீத பருத்தி பின்னலாடை ஏற்றுமதி இங்கிருந்து நடைபெறுகிறது. ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடிஅளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூர் நகரின் மக்கள்தொகை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, தற்போதைய சாலை, மருத்துவம், கல்வி தொடர்பான கட்டமைப்பு போதுமானதாக இல்லை.கடந்த 2006-ல் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளானில் 220 சதுர கி.மீ. பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது இதில் 617 சதுர கி.மீ.பகுதிகளை இணைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. திருப்பூரில் திருப்பூர் மாநகராட்சி, 4 பேரூராட்சிகள், 31 வருவாய் கிராமங்கள் உள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளுக்கான தனித்தனி வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன்படி, 2 பகுதிகளுக்கும் வீட்டுவசதி துறை செயலரை தலைவராகவும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை துணைதலைவர்களாகவும், நிதி, போக்குவரத்து, தொழில், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட நகர ஊரமைப்பு துறைஇயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள், வீட்டுவசதி துறை மேலாண்இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர், தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சென்னை மெட்ரோ ரயில்மேலாண் இயக்குநர் உள்ளிட்டோரை கொண்ட குழுமம் உருவாக்கப்படுகிறது. இதுதவிர, 2 பகுதிகளுக்கும் தனித்தனியாக குறு, சிறு, நடுத்தர தொழில்கள், தொழில் துறை, காவல் ஆணையர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட அறிவுரைகுழுவும் அமைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT