Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

ஆய்வு செய்ய விரைவில் அதிகாரிகள் நியமனம் - தலைவர்களின் நினைவு இல்லம் சீரமைக்கப்படும் : செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தகவல்

சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் எழிலன் எம்எல்ஏ, செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர்.

சென்னை

தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்களின் நினைவு இல்லங்கள் விரைவில் சீரமைக்கப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில்உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:

காமராஜர் இல்லத்தில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கெனவே இந்த நினைவு இல்ல பராமரிப்பு பணிகளுக்காக முதல்வர் வழிகாட்டுதல்படி ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால், மேற்கூரை சிதிலமடைந்துள்ளது. இதைசரிசெய்து வண்ணம் பூசப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள தலைவர்களின் நினைவு இல்லங்களை பாதுகாக்க, விரைவில் பொறுப்புஅதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். இதுகுறித்து முதல்வர் கவனத்துக்குகொண்டுசென்று சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

சென்னையில் பசும்பொன் தேவரின் சிலைக்கு ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நினைவு மண்டபம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘திரைப்படங்கள் ஒரு தரப்பை சார்ந்தோரின் சாதியை குறிக்கும் விதமாக எடுக்கப்பட்டால், உங்கள்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அதற்கு தனியாக தணிக்கை குழு இருக்கிறது, மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த குழுதான் முடிவெடுக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x