Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்புக்கு வரவேற்பு - போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

திருச்சி/தஞ்சாவூர்/திருவாரூர்

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள விவசாய சங்கங்கள், போராட்டத்தில் உயிரிழந்த விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்திஉள்ளன.

தேசிய - தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு: பிரதமர் மோடியின் அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்கிறோம். அதேவேளையில், வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 2 மடங்கு விலை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்புதிட்டத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்: பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததாலும், பஞ்சாப் உள்ளிட்ட5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. போராட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழப்புக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் நடந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன்: ஏறத்தாழ ஓராண்டாக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியை போராட்டக் களத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் ஆன்மாவுக்கு சமர்ப்பிக்கிறோம். இதேபோன்று மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐயும் ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்(இந்திய கம்யூனிஸ்ட்) மாநில துணை செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நவ.29-ம் தேதி முதல், ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், லட்சக்கணக்கான விவசாயிகளுடன் மீண்டும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளதால், பிரதமர் மோடி இந்தசட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார். இது உறுதிமிக்க விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்தவெற்றியாகும். மேலும், வரும்நாடாளுமன்றத் கூட்டத் தொடரில்இந்த அறிவிப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அரசு கொள்முதலை உத்தரவாதப்படுத்தும் சட்டம் கொண்டு வரவேண்டும். இப்போராட்டங்களில் உயிர் நீத்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளில் 650 பேர் போராட்டக் களத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிரதமரின் இந்த அறிவிப்பு உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

மானாவாரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் வெ.ஜீவக்குமார்: இந்தசட்டங்களை எதிர்த்து போராடியவிவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக இடைத்தரகர்கள் என கூறினார்கள். இதற்கு பிரதமர் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். விவசாயிகள் தங்களது உரிமைக்காக உயிரையும் துச்சமாக மதித்துப் போராடினர். இது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

இதேபோல, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ.விசுவநாதன், தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தர விமல்நாதன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x