Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

முன்னுரிமை பட்டியலில் புதிய பிரிவுகள் சேர்ப்பு - கரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு அரசு பணி வாய்ப்பு : முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை

சென்னை

அரசு பணிகளுக்கான தேர்வு முன்னுரிமை பட்டியலில் புதிதாக3 பிரிவுகள் சேர்க்கப்பட்டு முன்னுரிமை வழங்கும் நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கரோனாவில் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும்.

இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மேலாண்மைத் துறை செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அரசாணை:

சட்டப்பேரவையில் அறிவிப்பு

‘தமிழ் வழியில் படித்தவர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். கரோனாவில் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆகியோருக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

சில பிரிவுக்கு முன்னுரிமை

தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைப்படி, வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில், போரில் உடல்தகுதியை இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், கலப்பு திருமணதம்பதியர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதில், அனைத்து முன்னுரிமை இனத்தவருக்கும் உரிய பயன்சென்றடையாத நிலை உள்ளது.

எனவே, முன்னுரிமை அளிக்கும் முறையை சீரமைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையரிடம் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.

அந்த வகையில், முன்னுரிமை முறையை மறுசீரமைக்கும் வகையிலும், மேலே குறிப்பிடப்பட்ட 3 அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையிலும் பின்வரும் ஆணைகளை அரசு வெளியிடுகிறது.

தற்போதைய முன்னுரிமை பட்டியல் கீழ்க்கண்டவாறு ஒரேவரிசைப்படி மாற்றி அமைக்கப்படுகிறது.

1. கரோனா தொற்று அல்லது இதர காரணங்களால் பெற்றோர் இருவரையும் இழந்த மகன் அல்லது மகள்.

2. முதல் தலைமுறை பட்டதாரிகள்.

3. தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் படித்தவர்கள்.

4. போரில் உடல் தகுதியை இழந்த முன்னாள் ராணுவத்தினர்.

5. போரில் மரணம் அடைந்த அல்லது உடல்தகுதியை இழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் 2 நபர்கள் வரை.

6. ஆதரவற்ற விதவைகள்.

7. கலப்பு திருமண தம்பதியர் (தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி இனத்தவராக இருக்க வேண்டும்.)

8. முன்னாள் ராணுவத்தினர், அவரது மனைவி, மகள் அல்லது திருமணமாகாத மகள் மற்றும் தற்போது பணியில் உள்ள ராணுவத்தினரின் மனைவி, மகன் அல்லது திருமணமாகாத மகள்.

9. சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ்மொழி காவலர்களின் நேரடி வாரிசுதாரர்கள்.

10. மியான்மர், இலங்கை, கென்யா, உகாண்டா, தான்சானியா ஆகிய நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்.

11. அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அந்த குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர்.

12. மாற்றுத் திறனாளிகள் உட்பட 20 பிரிவினர்.

இடஒதுக்கீடு விதிகள்

அரசின் இடஒதுக்கீடு விதிகளுக்கு உட்பட்டு, இந்த முன்னுரிமை முறை பின்பற்றப்பட வேண்டும். ஒரு தேர்வில் எந்த முன்னுரிமை வரிசை எண்ணில் பணி நியமனம் முடிவடைகிறதோ, அதற்குஅடுத்த முன்னுரிமை வரிசை எண்ணில் இருந்து அடுத்த தேர்வில் முன்னுரிமை தொடங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x