Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM
தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக ‘வலிமை’ சிமென்ட்டை அறிமுகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் அதன் விற்பனையையும் தொடங்கி வைத்தார். இந்த சிமென்ட், வெளிச் சந்தையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமென்ட் ஆலை ஆண்டுக்கு 2 லட்சம் டன் உற்பத்தி திறனுடன். அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கடந்த 1970-ல் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகத்தால் அரியலூரில் ஆண்டுக்கு 5 லட்சம்டன் உற்பத்தி திறனுடன் ஒரு ஆலையும், 10 லட்சம் டன் திறன்கொண்ட மற்றொரு புதிய ஆலையும் நிறுவப்பட்டது. இந்த 3 ஆலைகளின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 17 லட்சம் டன் ஆகும். தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகம் ‘அரசு’ என்ற பெயரில் சிமென்ட்டை விற்று வருகிறது.
இந்நிலையில், தொழில் துறை மானியக் கோரிக்கையின்போது ‘வலிமை’ என்ற பெயரில் புதிய ரக சிமென்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி, உயர்தர வலிமை சிமென்ட்டை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிமுகப்படுத்தி, விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறைசெயலர் ச.கிருஷ்ணன், சிமென்ட்ஸ்கழக நிர்வாக இயக்குநர் அனில்மேஷ்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
அதிக உறுதித் தன்மை
டான்செம் நிறுவனத்தின் ‘வலிமை’ சிமென்ட் மிகச் சிறந்ததொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. இது சிமென்ட் உற்பத்தி தொழிலில் தனி இடம்பிடிக்கும். ஏற்கெனவே டான்செம்நிறுவனத்தால் தயாரிக்கப்படும்சிமென்ட்டுடன் ஒப்பிடும்போது, இதுஅதிக உறுதித் தன்மை, விரைவில்உலரும் தன்மை கொண்டதாக, அதிக வெப்பத்தை தாங்கக்கூடியதாக இருக்கும்.இது ‘போர்ட்லேண்டு போஸ்லோனா சிமென்ட்- பிபிசி’, ‘ஆர்டினரி போர்ட்லேண்டு சிமென்ட்-ஓபிசி’என 2 விதமாக தயாரிக்கப்படுகிறது. இந்த இரண்டும் வெளிச்சந்தையில், அரசு நிறுவனங்களிலும் பயன்படுத்தும் வகையில்கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு மூட்டை விலை ரூ.350
தற்போது மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பை, கட்டுமானத் தேவையை முற்றிலும் பூர்த்தி செய்யும் வகையில், இந்த சிமென்ட் வந்துள்ளது. குறைந்த விலையில் பயன்படுத்தும் வகையில் தரம்வாய்ந்த தொழில் நுட்பத்தில் இந்த சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.
தரத்தில் சிறிதும் குறையாமல்,தமிழக மக்களின் நலனுக்காக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படும்.
புதிய தொழில்நுட்பம், மூலப்பொருட்கள் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் அளவில் தயாரிக்கப்படும். ரேஷன் முறையில் இந்தசிமென்ட் வழங்கப்படாது. வலிமை சிமென்ட் தேவைப்படும் அளவுக்கு வெளிச் சந்தையில் கிடைக்கும். அரசு சிமென்ட் தயாரிப்பும் தொடர்ந்து நடைபெறும்.
வலிமை என்பது புதிய ரகம்.மற்ற சிமென்ட்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்கும். விநியோகஸ்தர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், வெளிச் சந்தையில் தேவைக்கேற்ப சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வழிசெய்யப்படும்.
நிலக்கரி விலை அதிகரித்துள்ளதால், தனியார் சிமென்ட்விலை அதிகமாக உள்ளது. விரைவில் விலை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT