Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி - முன்னாள் முதல்வர் பழனிசாமி உதவியாளரிடம் விசாரணை :

சேலம்

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக க் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் உட்பட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் மணி (45). இவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

குற்றப்பிரிவில் புகார் மனு

இந்நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் மணி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

புகாரில், ‘அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி மணி ரூ.17 லட்சம் பெற்றதாகவும், பணத்தை காடையாம்பட்டியைச் சேர்ந்த இடைத்தரகர் செல்வகுமார் மூலம் கொடுத்ததாகவும், ஆனால், வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.

2 பிரிவுகளில் வழக்கு

இதையடுத்து, மணி மற்றும் செல்வகுமார் மீது பணம் வாங்கி மோசடி செய்தல் (120 (1), பி, 420) உள்ளிட்ட இரு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மணியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான செல்வகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மணி மீது ஏற்கெனவே பலரும் சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x