Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

ரூ.8 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் பறிமுதல் : முத்துப்பேட்டையில் 2 பேர் கைது

திருவாரூர்

கடலில் வாழும் திமிங்கிலம் உட்கொள்ளும் உணவுப் பொருளில் செரிக்காதவற்றை ஆண்டுக்கு ஓரிரு முறை வாய் வழியாக வெளியேற்றுகிறது. இது அம்பர்கிரீஸ் (திமிங்கிலத்தின் உமிழ்நீர்) எனப்படுகிறது. இதை வளைகுடா நாடுகளில் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.

பல நாடுகளில் அம்பர்கிரீஸ் சாதாரணப் பொருளாக கருதப்பட்டாலும், இந்தியா மற்றும் தமிழ்நாடு வனச் சட்டத்தின்கீழ் இது அரியவகைப் பொருளாக கருதப்படுவதால், அரசு அனுமதியின்றி விற்பனை செய்வதும், கையாள்வதும் குற்றமாகும்.

இந்நிலையில், முத்துப்பேட்டை பகுதியில் அம்பர்கிரீஸ் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் வனத் துறையினர் அம்பர்கிரீஸ் விற்பதற்காக வந்த முத்துப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன்(52), தெற்குத் தெருவைச் சேர்ந்த நிஜாமுதீன்(52) ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள அம்பர்கிரீஸ் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, இருவரும் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x