Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM
தமிழக மின் வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இதனால், ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக செலுத்தக் கூடிய சூழலை கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றுள்ளனர் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கையின்போது ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கக்கூடிய சிறப்புத் திட்டத்தை முதல்வர் அறிவித்திருந்தார்.
இத்திட்டம் தொடங்கி, செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 4,819 விவசாயிகள் பயன்பெற உள்ளனர். இதில், 787 விவசாயிகளுக்கு ஏற்கெனவே ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 262 விவசாயிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
மின்கட்டணக் கணக்கீட்டை 2 மாதங்களுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக மாதம் ஒருமுறை மேற்கொள்வதற்கு அதிக எண்ணிக்கையில் கணக்கீட்டுப் பணியாளர்கள் தேவை. ஏற்கெனவே, கணக்கீட்டுப் பணியில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
ஸ்மார்ட் மீட்டர்
தற்போது, வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய அறிவிப்பு இக்கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது. இந்தப் பணி நிறைவடைந்தால், பணியாளர்கள் தேவைப்படாது. எனவே, இந்த வாக்குறுதியை தமிழக முதல்வர் நிச்சயமாக நிறைவேற்றுவார். வயலில் மின்கம்பி அறுந்து விழுவதால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.மின்வாரியத்தில் மொத்தமுள்ள 1.46 லட்சம் பணியிடங்களில் 56,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, மின்வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. ஆண்டுக்கு ரூ.16,000 கோடி வட்டி செலுத்தக்கூடிய சூழலில் கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இதையெல்லாம் சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நிலக்கரி தட்டுப்பாடு இல்லை
பின்னர், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, பணியின்போது மரணமடைந்த மின் ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் ஆகியவற்றுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆய்வின்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு மின்வாரியத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, இயக்குநர்(பகிர்மானம்) சிவலிங்கராஜன், திருச்சி மண்டல கண்காணிப்புப் பொறியாளர் க.அருள்மொழி, தஞ்சாவூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.விஜயகவுரி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT