Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் - வீரபாண்டி ஆ.ராஜா மாரடைப்பால் மரணம் : பிறந்த நாளன்று உயிரிழந்த சோகம்; முதல்வர் நேரில் அஞ்சலி

வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அருகில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர். (உள்படம்) வீரபாண்டி ராஜா.

சேலம்

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜா நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் 2-வது மகன் வீரபாண்டி ஆ.ராஜா (எ) ஆ.ராஜேந்திரன்(58). சேலத்தை அடுத்த வீரபாண்டி அருகே உள்ள பூலாவரியில் வசித்து வந்தார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு மலர்விழி, கிருத்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். முன்னாள் எம்எல்ஏவான வீரபாண்டி ராஜா தற்போது திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

1964 அக்.2-ம் தேதி பிறந்த வீரபாண்டி ராஜா தனது பிறந்தநாளை நேற்று காலை கொண்டாடும் விதமாக தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்துக்கு மாலை அணிவித்தார். வீட்டில் இருந்து பூலாவரி தோட்டத்தில் உள்ள தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தயாராக இருந்தார்.

அப்போது, அவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை, அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பூலாவரியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலமாக பூலாவரிக்குச் சென்று, வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வீரபாண்டி ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதிவேந்தன், எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடம் அருகில் இன்று (3-ம் தேதி) உடல் அடக்கம் நடக்கிறது.

முதல்வர் இரங்கல்

வீரபாண்டி ராஜாவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ‘இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர். மருத்துவமனை வாசலில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வாய் விட்டுக் கதறும் அளவுக்கு நம்மை விட்டுப் பிரிந்தார் வீரபாண்டியார். இதோ இப்போது வீரபாண்டி ராஜா. இவரைப் போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல, தூண் சாய்வதுபோல. வீரபாண்டியார் குடும்பத்துக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதேபோன்று, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், சு.திருநாவுக்கரசர் எம்.பி., தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x