Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

சேலம் அரசு மருத்துவமனையில் ஐஏஎஸ் அதிகாரிக்கு பிரசவம் : கேரளாவில் சார் ஆட்சியராக பணியாற்றுகிறார்

தர்மலா

சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளூர் கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலா (29). இவர், 2019-ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்று, தற்போது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.தர்மலாக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தாமரைக் கண்ணன் சென்னையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உயர்கல்வி (எம்டி) பயின்று வருகிறார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த தர்மலா பிரசவத்துக்காக, கரடிப்பட்டியில் உள்ள தாய்வீட்டுக்கு வந்திருந்தார். பிரசவசிகிச்சைக்காக, சேலம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி சேர்ந்தார். அங்கு அவருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகையில், ‘தனியார் மருத்துவமனையில் பிரசவ சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்று கூறினோம். ஆனால், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தர்மலா அரசு மருத்துவமனையில்தான் பிரசவ சிகிச்சை செய்து கொள்வேன் என்று உறுதியாகக் கூறினார். அவரது விருப்பப்படி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார். சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றனர்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்டாக்டர் வள்ளி சத்யமூர்த்தி, மகப்பேறு சிகிச்சைப் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் சுபா ஆகியோர் கூறும்போது, ‘தர்மலா இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று விருப்பத்துடன் வந்ததாக தெரிவித்தார். அவருக்கு பிரசவ கால சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்ததால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது, தாயும், சேயும் நலமாக உள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x