Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

பிளஸ் 2 தேர்வு விவகாரத்தில் - மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே முடிவு : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி

பிளஸ் 2 தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, திருச்சி வி.என்.நகரில் உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பிளஸ் 2தேர்வு விவகாரத்தில் கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மருத்துவ நிபுணர் குழு, தோழமைக் கட்சியினர் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருடன் மே 4-ம் தேதி (இன்று) மாலை 4 மணியளவிலும், அதன்பிறகு கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் மற்றும் மாணவர் அமைப்பினருடன் மாலை 5 மணியளவிலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

அதைத்தொடர்ந்து, மே 5-ம் தேதி (நாளை) அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அவர் இறுதி முடிவை அறிவிப்பார்.

ஏற்கெனவே 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் அளிப்பது என்று குழு அமைத்து கருத்து கேட்டு வருகிறோம்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு சரியாக மதிப்பீடு செய்து மதிப்பெண் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆனால், எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள், கல்வி அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் பெரும்பாலானோர் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்றுதான் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

முதல்வர் அறிவுறுத்தியபடி மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் அவர்களது உடல் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x