Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

கருப்பு பூஞ்சை பாதிப்பை ஆராய குழு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கான உதவி மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

“கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆராய மருத்துவ நிபுணர்கள் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது” என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. சென்னையில் மிக வேகமாக குறைந்து வருகிறது. நிச்சயம் முழுமையாக குறையும். தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் இருப்பு போதுமான அளவில் உள்ளது. முதல்வர் எடுத்த நடவடிக்கை காரணமாக ரூர்கேலா, ஜாம்ஷெட்பூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளது. கரோனா மூன்றாவது அலை வந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை வராத அளவுக்கு, ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

தமிழகத்துக்கு சுமார் 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மீதமுள்ள தடுப்பூசிகளை போடும் பணி நடைபெற்று வருகிறது. 18 முதல் 44 வயது வரையுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட அரசு சார்பில் ரூ.46 கோடி கொடுக்கப்பட்டு, 12 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வருகிறது.

கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்கெனவே நீண்ட கால நீரிழிவு நோயாளிகளுக்கு வந்துள்ளது. தற்போது, கரோனாவுக்கு பின்பு அதிகமாக வருவதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய, வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 10 மருத்துவ நிபுணர்களை தேர்வு செய்துள்ளோம். ஓரிரு நாட்களில் ஆராய்ச்சி தொடங்க உள்ளது. ஆய்வுக்கு பிறகே சரியான முடிவுக்கு வரமுடியும். கரோனா இறப்பு எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. மறைக்கவும் இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது கருப்பு பூஞ்சை தொற்றால் 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 15 முதல் 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் அமைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த தொற்றுக்கான மருந்துகளை போதுமான அளவில் வழங்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

ஆய்வின்போது அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன், ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், எஸ்.பி. ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x