Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு - துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் முற்றுகை : பண்டாரம்பட்டி கிராமத்தில் கருப்புக் கொடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 2018-ம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை கண்டித்து, கடந்த 2018-ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் நேற்றுஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

நாடு முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி அனுமதியளித்தது.

எதிர்ப்பாளர்கள் ஆட்சேபம்

இதற்கு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கடந்த 2 நாட்களாக பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில் வீடுகளுக்கு முன்பாக 'ஸ்டெர்லைட்டை தடை செய்' என்றவாசகத்தை கோலமாக வரைந்து வைத்திருந்தனர். வீடுகள் மற்றும்தெருக்களில் கருப்புக் கொடிகள்கட்டப்பட்டிருந்தன. இந்த கிராமத்தை போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் சுமார் 50 பேர் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். உயிரிழந் தவர்களின் புகைப்படங்களை கையிலேந்தியபடி, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் கே.ரெங்கநாதன், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி குரூஸ்திவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் எங்களில் பலரை இழந்துள்ளோம். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்த ஆலை நச்சு ஆலை எனக் கூறி தமிழக அரசே மூடியுள்ளது. `இந்தியாவுக்கே ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறோம்’ என, உண்மைக்கு புறம்பான தகவலை கூறி ஆலையை திறக்க உத்தரவு பெற்றுள்ளனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆயிரம் வழிகள் இருக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையை திறந்துதான் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x