Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM
`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்கக்கூடாது’ என வலியுறுத்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக முடிவெடுக்க சென்னையில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாட்டில் நிலவும்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய 4 மாதங்களுக்கு தற்காலிகமாக அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்ப்பாளர்கள் மனு
சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், இவர்கள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவுவாயில்முன் மறியலில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமுர்த்தி தலைமையிலான 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆட்சியர் அலுவலகம் மற்றும்ஸ்டெர்லைட் ஆலைக்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக வாசல், பிரதான நுழைவு வாயில், ஆர்டிஓ அலுவலக சாலை சந்திப்பு, தேசிய நெடுஞ்சாலை அருகே என 4 இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தண்ணீரை பீச்சியடிக்கும் வாகனம், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசும் வாகனம், தீயணைப்பு வாகனம் போன்றவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு வெளியே சுமார் 100 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி டிஐஜி பிரவின்குமார் அபிநபு தலைமையில், எஸ்பி ஜெயக்குமார், தென்காசி எஸ்பி சுகுணாசிங் ஆகியோர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT