Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் மரணமடைந்த விவகாரத்தில் - வேலூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு : மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு நேரில் விசாரணை

வேலூர்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குறைபாட்டால் 7 பேர் மரணமடைந்தது குறித்து, விரிவான அறிக்கையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளகரோனா வார்டில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், நுரையீரல் தொற்றுப் பிரச்சினையுடன் இருப்பவர்கள் மற்றொரு வார்டில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஆக்சிஜன் விநியோக மையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் திணறினர். அதற்குள் கரோனாவில் குணமடைந்து நுரையீரல் தொற்றுப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

மாற்று ஏற்பாடாக 5 அடி உயரம் கொண்ட சிலிண்டர்கள் மூலம் நோயாளிகள் சிலருக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.

மருத்துவக் கல்வி இயக்குநர்

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு நேற்று முன்தினம் இரவு வேலூர் வந்தார். அங்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் செல்வி மற்றும் மருத்துவக் குழுவினரிடம் விசாரணைநடத்தினார். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளின் விவரம், எத்தனை பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு, ஆக்சிஜன் இருப்பு விவரங்கள் போன்ற விவரங்களை விசாரித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபுவிடம் நேற்று தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 10 ஆயிரம்லிட்டர், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோகம் செய்யும் வசதி உள்ளது.மேலும், 150 எண்ணிக்கையில் 5 அடி உயர சிறிய சிலிண்டர்கள் உள்ளன. இதன் மொத்த கொள்ளளவு 1,500 லிட்டர். மருத்துவமனையில் தற்போதுள்ள நோயாளிகளுக்கு தினசரி 1,500 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை

இதன்மூலம் இன்னும் 10 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. எனவே, மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. எனவே, 7 பேர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விரிவான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பிரச்சினை இல்லை.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பு வசதியை 2, 3 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளோம்” என்றார்.

7 பேர் உயிரிழப்புக்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x