Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM
‘சட்டப்பேரவையில் திமுகவினரால் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதாக பிரதமர் அவதூறு கூறுகிறார்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆரல்வாய்மொழி மற்றும் ஆலங்குளத்தில் நேற்று பிரச்சாரம் செய்த ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி வழக்கம்போல் பொய் பேசியுள்ளார். 1989 மார்ச் 25-ல் தமிழகசட்டப்பேரவையில் ஜெயலலிதாவை திமுக அவமானப்படுத்தியதாக அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளார். அப்போது, சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு அருகில் இப்போதைய திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் இருந்தார். அவர் அதிமுகவைவிட்டு விலகி வந்த பின்பு, 1989 மார்ச் 25-ல் சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பதை, அதே சட்டப்பேரவையில் பேசினார். சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று கூறினார். அதற்கு தானும் உடந்தையாக இருந்ததாகவும், அதற்கு வருத்தப்படுவதாகவும் கூறினார். இது சட்டப்பேரவை அவைக் குறிப்பில் உள்ளது. திருநாவுக்கரசரின் அந்தப் பேச்சை மோடிக்கு அனுப்பி வைக்க நான் தயார்.
ஊழலை ஒழிப்போம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை அருகில் வைத்துக்கொண்டு பிரதமர் பேசுகிறார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியல் புள்ளிவிவரத்தை ஆதாரத்தோடு ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். ரவுடிகள், கேடிகளை பாஜகவில் சேர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதுதான் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணமா?. பிரதமர் மோடி மீண்டும் 2-ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT