Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM
சட்டப் பேரவைத் தேர்தல் மிக முக்கியமானது. உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே இத்தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ், சிவகங்கை அரண்மனை வாசலில் இத்தொகுதி வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மானாமதுரை தேவர் சிலை அருகே இத்தொகுதி வேட்பாளர் நாகராஜன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பேசியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தல் மிகமுக்கியமானது. நீங்கள் உழைத்தால் இந்தத் தேர்தலில் வெற்றிபெறலாம். உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில் சாதி, மத சண்டையின்றி சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. பெண்கள், மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் இது தலைகீழாக மாறிவிடும். அந்த நிலைக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. தொழில் முனைவோர் மாநாட்டில் ரூ.7.5 லட்சம் கோடி முதலீட்டில் 304 தொழில்கள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகிஉள்ளது.
எதிர்க் கட்சிகள், மக்கள் கேட்காமலேயே எனது மனதில் உதித்த திட்டம்தான் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு. இதில் 435 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் இனி அரசு பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கும்.
ஸ்டாலின் பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம். பொய் பேசியதால்தான் 10 ஆண்டுகள் திமுகவுக்கு வனவாசம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அத்தொகுதி அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
நாம் நாட்டுக்காக என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறோம். திமுக தலைவர் தன் குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறார்.
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு உடனே மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கிறார்கள். நில அபகரிப்பு கட்சி திமுக. 14 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்ததை அதிமுக அரசு மக்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளது. என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்கிறார்கள். அது குறித்து என்னுடன் ஒரே இடத்தில் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன். நான்கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் அளிப்பாரா?
இவ்வாறு அவர் பேசினார்.
ஓ.பி.எஸ்ஸை ஆதரித்து போடியில் இன்று முதல்வர் பிரச்சாரம்
முதல்வர் பழனிசாமி இன்று காலை கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அதன் பின்பு திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக மாலை 5.30 மணிக்கு போடி வருகிறார்.
இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில் தேனி மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT