Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
திமுக ஆட்சி அமைந்ததும் முதல் கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் இயற்றப்படும் என தருமபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், பர்கூர் மதியழகன், வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் ஒய்.பிரகாஷ் மற்றும் ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து சூளகிரியில் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை செய்த ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். அதிமுகவில் ஒருவர் வெற்றி பெற்றாலும், அவர் பாஜக எம்எல்ஏ என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். அதிமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
கரோனாவால் மூடப்பட்ட தொழிற்சாலைகளை இயங்க வைத்து அனைவருக்கும் மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சிறு தொழிற்சாலைகள் இயங்க ரூ.15 ஆயிரம்கோடி கடனுதவி வழங்கப்படும்.அரசுப் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர். நீர்நிலைகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் 75ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
சூளகிரியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின், கிருஷ்ணகிரி நகருக்குள் நடைபயணமாக சென்று திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இதையடுத்து, தருமபுரி 4 சாலை சந்திப்பில் நேற்று ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. பாலக்கோடு வேட்பாளர் முருகன் (திமுக), பென்னாகரம் வேட்பாளர் இன்பசேகரன் (திமுக) தருமபுரி வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி (திமுக), பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் பிரபு ராஜசேகர் (திமுக), அரூர் வேட்பாளர் குமார் (மார்க்சிஸ்ட்) ஆகியோருக்கு ஆதரவு கேட்டு இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முதல் கூட்டத்திலேயே தீர்மானம் இயற்றப்படும்.
தமிழகத்தில் இந்தியை திணித்து, நீட் தேர்வை திணித்து, மத வெறியைத் தூண்டும் சதி நடக்கிறது. பெரியார் பிறந்த இந்த திராவிட மண்ணில் அது பலிக்காது. அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதும் மிக அவசியம்.
இவ்வாறு பேசினார்.
கரோனாவால் மூடப்பட்ட தொழிற்சாலைகளை இயங்க வைத்து அனைவருக்கும் மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சிறு தொழிற்சாலைகள் இயங்க ரூ.15 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT