Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM
திமுக ஆட்சிக்கு வந்த உடன், கும்மிடிப்பூண்டியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். மெட்ரோரயில் சேவையை கும்மிடிப்பூண்டிவரை நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கும்மிடிப்பூண்டியில் நடந்த பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி (தனி) தொகுதி காங்கிரஸ்வேட்பாளர் துரை.சந்திரசேகர்ஆகியோரை ஆதரித்து, கும்மிடிப்பூண்டி பஜாரில் திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் செய்ய முடியாத காரியங்களை, பொத்தாம் பொதுவான பல உறுதிமொழிகளாக வழங்கி உள்ளனர்.
ஏற்கெனவே 2011, 2016 தேர்தலின்போது அதிமுக சொன்ன உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வுக்காக சட்டப்பேரவையில் போடப்பட்ட தீர்மானம் எந்த நிலையில் இருக்கிறது என்று மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்கத் தயாராக இல்லை.
விவசாயக் கடனை தள்ளுபடிசெய்யவேண்டும் என 4 ஆண்டுகளாக விவசாயிகள் போராடினர்.அப்போது அதைப் பற்றி சிந்திக்காத பழனிசாமி இப்போது விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த உடன்,மீஞ்சூர் - பொன்னேரி புறவழிச் சாலை அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கும்மிடிப்பூண்டியில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகேசுற்றுலாத் தலம் அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் குளிர்பதனக்கிடங்கு உருவாக்கப்படும்.
திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போகிறோம் என்று சொன்னேன். இப்போது 5 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருக்கும் நான் 200 அல்ல, 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறப்போகிறது என உணர்கிறேன்.
ஓர் இடத்தில்கூட பாஜக, அதிமுகவெற்றி பெற்றுவிடக் கூடாது. அதிமுக வெற்றி பெற்றால் அது பாஜகவின் வெற்றிதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒருஎம்.பி. அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். அவர் இப்போது பாஜகஎம்.பி.யாக செயல்படுகிறார்.
உலகத் தமிழர்களின் தலைவராக விளங்கிய கருணாநிதிக்கு 6 அடி இடம் தர மறுத்த பழனிசாமிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா?
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT