Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

தேர்தலுக்கு முன்னரே மக்கள் நினைத்ததை - அதிமுக அரசு செயல்படுத்தியது : ஓமலூரில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்

ஓமலூரில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி.படம்: எஸ்.குரு பிசாரத்

சேலம்

மக்கள் என்ன நினைத்தார்களோ அதை தேர்தலுக்கு முன்பாக நாங்கள்தான் செயல்படுத்தினோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓமலூரில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேட்பாளர்கள் அறிவிப்புக்கு எதிர்ப்புஅதிமுக-வில் மட்டும் இல்லை. அனைத்துக் கட்சிகளிலும் எதிர்ப்புகள் உள்ளன. எல்லோருக்கும் தேர்தலில் போட்டியிட ஆசை உள்ளது. அதனால், எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் பேசி சமாதானம் செய்துவிட்டோம். புதுச்சேரி மாநில தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பயிர்க்கடன் தள்ளுபடி

திமுக-வின் தேர்தல் அறிக்கையை இன்னமும் பார்க்கவில்லை. அதைப் பற்றி இப்போதுகருத்துக் கூற முடியாது. ஆனால்,நாங்கள்தான் மக்களின் எண் ணத்தை அறிந்து, முதன்முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். தேர்தல் அறிக்கையாக அல்ல, மக்கள் என்ன நினைத்தார்களோ அதை அறிந்து, தேர்தலுக்கு முன்பாக செயல்படுத்தினோம்.

வறட்சி, புயல், வெள்ளம் என பாதிக்கப்பட்டிருந்த விவசாயி களுக்காக, பயிர்க்கடன் தள்ளுபடி வேண்டும் என விவசாய சங்கங்கள் பல வலியுறுத்தின. நானும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளின் பாதிப்பை அறிந்து கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டிருந்த பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்துஅதனை தேர்தலுக்கு முன்ன தாகவே செயல்படுத்தினோம்.

கருத்துக் கணிப்பு என்பது பத்திரிகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வெளியிடுவது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறாது என கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

ஆனால், விக்கிரவாண்டியை திமுக-விடம் இருந்தும், நாங்குநேரியை காங்கிரசிடம் இருந்தும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற் றோம்.

அதிமுக கூட்டணி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அவர்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கி றோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘தேமுதிக-வுக்கு பக்குவம் இல்லை’

முதல்வர் பழனிசாமி பேட்டியின்போது மேலும் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதால் கூட்டணிக்கு நிச்சயமாக இழப்பு ஏற்படவில்லை. அவர்கள் பக்குவமில்லாமல் அரசியல் பண்ணுகிறார்கள். கூட்டணி என்பது அவ்வப்போது ஏற்படுகின்ற ஒரு நிகழ்வு.

கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் அப்படி நினைத்தார்கள், இப்படி நினைத்தார்கள் என பேசுவது சரியல்ல. அது கூட்டணிக்கும் அழகல்ல.

உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவது தவறல்ல. ஆனால், ஒரு கட்சி மீதுபழி சுமத்துவது தவறு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வாக்கு வங்கி சதவீதம், தகுதி உள்ளது. அதற்கேற்பதான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x