Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM
கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் காந்தி சிலை மாற்றப்பட்டது மற்றும் தரமற்ற கட்டுமானத்தைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸாரை கரூர் நகர போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை இருந்தது. ரவுண்டானாவை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அங்கிருந்த காந்தி சிலை நேற்று முன்தினம் அகற்றப்பட்டது. இதைக்கண்டித்து, காங்கிரஸ் மற்றும் திமுகவினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதே இடத்தில் காந்தியின் முழு உருவச்சிலை நேற்று வைக்கப்பட்டது. அந்தச் சிலையை பார்வையிட்ட கரூர் எம்பி ஜோதிமணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரவுண்டானாவில் மேற்கொள்ளப்படும் பணிக்கான ஆணையை நேற்று (நேற்று முன்தினம்) கேட்ட நிலையில், கடந்த 12-ம் தேதி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, வழக்கறிஞரின் கருத்து பெற்று பணி ஆணை பிறப்பிக்கப்பட்டதாக போலியான ஒரு ஆணை தரப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் குழாயால் கட்டுமானத்தை சுரண்டியபோது பெயர்ந்து விழுகிறது. இதனால் இங்கு நடைபெறும் கட்டுமானம் தரமற்ற முறையில் உள்ளது. இந்த சிலையை நாளை (இன்று) முதல்வர் திறந்து வைப்பதாக கூறப்படுவதால், முதல்வரிடமே இதுகுறித்து முறையிடுவேன் என்றார்.
தொடர்ந்து, முறைகேடாகவும், தரமற்ற முறையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானத்தை கண்டித்தும், பணி ஆணையை காட்டக் கோரியும் எம்பி ஜோதிமணி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி, முன்னாள்எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி உள்ளிட்ட காங்கிரஸார் மற்றும் திமுகவினர் ரவுண்டானாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார், ஜோதிமணி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 67 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கே.எஸ்.அழகிரி கண்டனம்
ஜோதிமணி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, அடக்குமுறையை கையாண்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறேன். ஜோதிமணி உட்பட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நாடாளுமன்ற உறுப்பினரின் பணியை அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் நடந்துகொண்டனர். காவல்துறையினரை வைத்து அவரை அந்தபகுதியில் இருந்து அப்புறப்படுத்தி கைது செய்திருப்பது மிக மோசமான நடவடிக்கையாகும். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகையநிலை நீடித்தால், எதிர்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயக உரிமைகள் பறிபோகும் நிலை உருவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT