Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM
“தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி அதிமுகவினருக்கு மட்டுமே பயன்தரும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுரண்டை சாலையில் உள்ள அண்ணா திடலில் நடைபெற்ற திமுக பிரச்சார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக கடந்த 2016-ம் ஆண்டும் ஒரு நாடகத்தை நடத்தினார்கள். 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறினார்கள்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை ரத்து செய்யக் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்றுக்கொண்டு, அனைத்து விவசாயிகளுக்கும் சலுகை வழங்கும் வகையில் அரசாணையை மாற்றி வெளியிட ஆணையிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த அரசு தான்அதிமுக அரசு. வழக்கு நடக்கும்போதே விவசாயிகளுக்கு நெருக்கடி தந்து கடனை வசூலித்தனர்.
இப்போது கடனை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தேர்தலுக்காக மட்டுமே. கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தில் அதிமுகவினர் உள்ளதால், அவர்களது உறவினர்கள் பெயரில் பயிர்க்கடன் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது. உண்மையான சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. அவர்கள் சாகுபடிக்காக நகைகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்துள்ளனர். அந்த கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அதிமுகவினருக்கு மட்டுமே பயன் தரும்.
எம்ஜிஆரை இளம் வயதில் நான் அறிவேன். என்னை அவரும் நன்கு அறிவார். இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் எம்ஜிஆரை சினிமாவில் தான் பார்த்திருப்பார்கள். எம்ஜிஆரால் பாராட்டப்பட்டவன் தான் இந்த ஸ்டாலின் என்றார். மேலும், விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடந்த கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT